Posted in

பிரான்ஸ் தயாரித்துள்ள “ரீப்பர்” ட்ரோன்கள்: உலகிலேயே அதி சக்த்தி வாய்ந்தவை ?

பிரான்ஸ் வான் மற்றும் விண்வெளிப் படை (AAE), தனது MQ-9 Reaper ட்ரோன்களைப் பயன்படுத்தி, வான்வெளியில் அச்சுறுத்தலாக வரும் மற்ற ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தும் புதிய வான் பாதுகாப்பு சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. தெற்கு பிரான்சில் உள்ள ‘இல் டு லெவன்ட்’ (Île du Levant) என்ற ராணுவ சோதனைத் தளத்தில் ஏப்ரல் 2-ம் தேதி இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது. வழக்கமாகத் தரை இலக்குகளைத் தாக்கப் பயன்படுத்தப்படும் ‘ஹெல்பயர்’ (Hellfire) ஏவுகணைகளை ஏற்றிச் சென்ற ரீப்பர் ட்ரோன், வானில் பறந்து வந்த ஒரு இலக்கு ட்ரோனை மிகத் துல்லியமாகக் குறிவைத்துத் தாக்கி அழித்துள்ளது.

இந்த சோதனையின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், ஹெல்பயர் ஏவுகணைகள் பிரான்ஸ் வான்படையில் ரீப்பர் ட்ரோன்களுடன் இணைக்கப்பட்ட மூன்றே மாதங்களுக்குள் இந்த புதிய ‘C-UAS’ (Counter-Unmanned Aerial System) திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரீப்பர் ட்ரோன்கள் பெரும்பாலும் உளவு பார்ப்பதற்கும் (Surveillance) மற்றும் தரை இலக்குகளைத் துல்லியமாகத் தாக்குவதற்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால், தற்போது வானிலேயே மற்ற ட்ரோன்களை இடைமறித்துத் தாக்கும் திறனைப் பெற்றிருப்பதன் மூலம், பிரான்சின் வான் பாதுகாப்பு ஒரு புதிய உயரத்தை எட்டியுள்ளது.

நவீன காலப் போர்களில் ஆளில்லா விமானங்கள் அல்லது ட்ரோன்கள் மிகப்பெரிய சவாலாக மாறி வருகின்றன. இதற்குப் பதிலடி கொடுக்க பிரான்ஸ் ஒரு ‘பல அடுக்கு வான் பாதுகாப்பு’ (Multi-layered air defense) முறையை உருவாக்கி வருகிறது. இதில் அதிவேக இலக்குகளைத் தாக்க ‘ரஃபேல்’ (Rafale) போர் விமானங்களும், தாழ்வாகப் பறக்கும் இலக்குகளைத் தாக்க ‘ஃபெனெக்’ (Fennec) ஹெலிகாப்டர்களும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளன. தற்போது ரீப்பர் ட்ரோன்களும் இந்த வரிசையில் இணைந்துள்ளதால், நீண்ட நேரம் வானில் இருந்தபடியே எதிரி ட்ரோன்களைக் கண்காணித்துத் தாக்கும் வலிமை பிரான்ஸிற்கு கிடைத்துள்ளது.

ரீப்பர் ட்ரோன்கள் ஒரே இடத்தில் சுமார் 27 மணிநேரத்திற்கும் மேலாகப் பறக்கும் திறன் கொண்டவை. இதன் மூலம் முக்கியமான ராணுவ நிலைகள் மற்றும் உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்கும் பணிகளில் இவை மிகச் சிறப்பாகச் செயல்படும். தரைக்கட்டுப்பாட்டு அறையிலிருந்து நான்கு பேர் கொண்ட குழுவால் இயக்கப்படும் இந்த ட்ரோன்கள், அதிநவீன தெர்மல் கேமராக்கள் மூலம் இலக்குகளை அடையாளம் கண்டு உடனடியாகத் தாக்க வல்லவை. இந்த புதிய சோதனையின் வெற்றி, வரும் காலங்களில் பிரான்ஸ் தனது வான்பரப்பைப் பாதுகாப்பதில் ட்ரோன் தொழில்நுட்பத்தை எந்த அளவுக்குத் தீவிரமாகப் பயன்படுத்தப்போகிறது என்பதைக் காட்டுகிறது.