Posted in

கயல் சீரியல் நடிகை கணவர் வீடியோ காலில் இருந்தவேளையே தற்கொலை செய்துகொண்டார் !

சின்னத்திரையில் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருந்த நடிகை சுபாஷினி, திருமணமான இரண்டே ஆண்டுகளில் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, படப்பிடிப்பு தொடர்பாக கணவர் பிபின் சந்திராவுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தபோது, இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் வெடித்துள்ளது. ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற சுபாஷினி, “நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்” என்று கூறிவிட்டு, வீடியோ காலைத் துண்டிக்காமலேயே மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட அந்தக் கொடூரக் காட்சி கணவரின் கண்களுக்கு முன்பே அரங்கேறியுள்ளது.

இந்தக் கோரச் சம்பவத்தைப் பார்த்து பதறிப்போன பிபின் சந்திரா, உடனடியாகக் குடியிருப்பு காவலாளியைத் தொடர்பு கொண்டு மனைவியைக் காப்பாற்றும்படி கதறியுள்ளார். ஆனால், கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால் எவராலும் உள்ளே நுழைய முடியவில்லை. தகவலறிந்து விரைந்து வந்த போரூர் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, சுபாஷினி சடலமாகத் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். எப்போதும் இன்ஸ்டாகிராமில் துள்ளலும் உற்சாகமுமாக வீடியோக்களைப் பதிவிடும் ஒரு தைரியமான பெண், ஒரு சில நிமிட ஆத்திரத்தில் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பார் என்பதை யாராலும் நம்ப முடியவில்லை.

மிகவும் உருக்கமான விஷயம் என்னவென்றால், வரும் ஏப்ரல் 12-ம் தேதி சுபாஷினியின் பிறந்தநாளும், ஏப்ரல் 21-ம் தேதி இவர்களது இரண்டாவது திருமண நாளும் வரவிருந்தது. இந்த இரண்டு விசேஷங்களையும் மிகக் கோலாகலமாகக் கொண்டாட பிபின் – சுபாஷினி ஜோடி திட்டமிட்டிருந்த நிலையில், அடுத்த சில நாட்களிலேயே சுபாஷினியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது விதியின் கொடூர விளையாட்டு. “நீ இல்லாமல் நான் எப்படி வாழ்வேன்… ஏன் என்னை விட்டுப் போயிட்ட?” என்று சமூக வலைதளத்தில் பிபின் சந்திரா பதிவிட்டுள்ள கண்ணீர் வரிகள் காண்போரைக் கலங்கச் செய்கிறது.

சுபாஷினியின் இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் கணவருடன் அவர் மகிழ்ச்சியாக இருந்த புகைப்படங்களும், வீடியோக்களுமே நிறைந்திருக்கின்றன. தற்கொலைக்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு கூட மிகவும் சந்தோஷமான வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அப்படிப்பட்டவர் ஒரு சாதாரண சண்டையில் இவ்வளவு பெரிய முடிவை எடுத்தது ஏன்? இது வெறும் குடும்பப் பிரச்னைதானா அல்லது வேறு ஏதேனும் பின்னணி இருக்கிறதா? என்ற கோணத்தில் போரூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னத்திரை உலகமே ஒரு திறமையான நடிகையை இழந்த துக்கத்தில் ஆழ்ந்துள்ளது.