தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள புதிய அரசியல் சூழலில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை (அமமுக) அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் (அதிமுக) முழுமையாக இணைத்துவிட வேண்டும் என்ற அழுத்தம் அதன் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தவெகவின் அசுர எழுச்சி மற்றும் அதிமுகவின் தற்போதைய அரசியல் சரிவு ஆகியவற்றை உற்றுநோக்கும் அமமுகவின் மூத்த நிர்வாகிகள் மற்றும் சீனியர் தலைவர்கள் தங்களின் அரசியல் எதிர்காலம் குறித்துக் கடுமையான கலக்கமடைந்துள்ளனர். கட்சியின் வளர்ச்சிக்காக இதுவரை கணிசமாகச் செலவு செய்து வந்த நிர்வாகிகள் பலரும், தற்போதைய சூழலில் மேற்கொண்டு செலவு செய்யத் தயங்கித் தங்களது பணப் பெட்டிகளை மூடிவிட்டதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொடக்கக் காலத்தில் அதிமுகவைக் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் தொடங்கப்பட்ட அமமுகவின் எதிர்காலமே தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளதால், அக்கட்சியின் சீனியர்கள் தினகரனைச் சுற்றி வளைத்துத் தொடர் அழுத்தங்களை கொடுத்து வருகின்றனர். இதுகுறித்துச் சமீபத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, “இது எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களை ஒருங்கிணைக்க ஆரம்பிக்கப்பட்ட இயக்கம்” என்று முன்பு கர்வமாகப் பேசி வந்த தினகரன், தற்போது தனது சுருதியை முற்றிலும் குறைத்துக் கொண்டுள்ளார். “காலமும் சூழ்நிலையும்தான் இதனை முடிவு செய்யும்” என அவர் மிகவும் மென்மையான தொனியில் பதிலளித்திருப்பது, இணைப்புக்கான சாத்தியக்கூறுகளை அவர் மறுக்கவில்லை என்பதையே காட்டுகிறது.
இருப்பினும், அமமுகவை அதிமுகவுடன் இணைத்து, டி.டி.வி. தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வருவதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குச் சற்றும் உடன்பாடு இல்லை என்று கோட்டை வட்டாரங்கள் திட்டவட்டமாகக் கூறுகின்றன. டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த சில அதிமுக நிர்வாகிகள் இபிஎஸ்-ஸை நேரில் சந்தித்து, “கட்சியைப் பலப்படுத்த தினகரனை இணைக்க வேண்டும்” என வலியுறுத்திய போதிலும், இபிஎஸ் அதனை ஏற்க மறுத்துவிட்டார். “நாம் எப்போதும் தேர்தல் கூட்டணியில் மட்டும் நீடிப்போம்; அவர் தனது கட்சியைத் தனியாகப் பார்த்துக் கொள்ளட்டும், நாம் அவருக்குத் துணையாக இருப்போம்” என்று கூறி இணைப்புப் பேச்சுவார்த்தைக்கு இபிஎஸ் முற்றிலும் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகத் தெரிகிறது.
அமமுகவின் இந்த உட்கட்சி நெருக்கடியும், அதிமுகவின் பிடிவாதமும் தமிழக அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஒருபுறம் தவெகவின் புதிய ஆட்சியை எதிர்கொள்ளத் திராவிட மற்றும் அதன் சார்பு இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்ற குரல்கள் ஒலித்தாலும், பழைய அதிகாரப் போட்டிகள் காரணமாக இபிஎஸ்-தினகரன் இடையேயான மனக்கசப்புகள் இன்னும் தீர்ந்தபாடில்லை. இதனால், கட்சியைத் தக்க வைக்கப் போராடும் தினகரனுக்கும், தங்கள் பக்கமிருந்து மேலும் எம்.எல்.ஏ-க்கள் தவெக பக்கம் பாய்வதைத் தடுக்கப் போராடும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே இந்த ‘இணைப்பு’ விவகாரம் பெரும் ராஜதந்திர யுத்தமாக உருவெடுத்துள்ளது.