தென்னிந்திய சினிமாவின் ‘சென்சேஷனல்’ நாயகியாக வலம் வரும் ஸ்ரீலீலா, தற்போது ஒரு பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். பவன் கல்யாணின் ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்தின் வெற்றி விழாவில் பேசிய அவர், “மாதவிடாய் என்பது ஒரு சாக்குப்போக்கு அல்ல” என்று கூறியது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. “நமது பெரும்பாலான பாடல்களுக்கு நான் மாதவிடாய் காலத்திலும் நடனமாடி இருக்கிறேன். நாம் அதிகாரத்திலும் சமத்துவத்திலும் பங்கெடுக்க விரும்பும் போது, இதுபோன்ற உடல் ரீதியான தடைகளை ஒரு சாக்காகச் சொல்லக் கூடாது” என்ற அவரது பேச்சு, பல பெண்களைக் கொதிப்படையச் செய்துள்ளது.
ஸ்ரீலீலாவின் இந்தப் பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்ப முக்கியக் காரணம், அவர் ஒரு மருத்துவப் பின்னணி (MBBS) கொண்டவர் என்பதுதான். “ஒரு மருத்துவராக இருந்துகொண்டு, மாதவிடாய் கால வலி மற்றும் உடல் உபாதைகள் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும் என்பதை எப்படி மறந்தீர்கள்?” எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். பி.சி.ஓ.எஸ் (PCOS) மற்றும் தாங்க முடியாத வயிற்று வலியால் அவதிப்படும் பெண்களுக்கு இது ஒரு ‘சாக்கு’ அல்ல, அது ஒரு ‘வேதனை’ என்பதை ஸ்ரீலீலா உணரவில்லை எனப் பதிவுகள் குவிந்து வருகின்றன.
ஏற்கனவே இதே படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன், தான் ஒரு “நாயுடு அப்பாயி” (நாயுடு வீட்டுப் பையன்) என்று தனது சாதியைக் குறிப்பிட்டுப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, பின்னர் அவர் மன்னிப்பும் கோரியிருந்தார். அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது ஸ்ரீலீலாவின் இந்தக் கருத்து படத்தின் வெற்றி விழாவையே ஒரு போர்க்களமாக மாற்றியுள்ளது. “உங்களுக்கு வலி குறைவாக இருந்திருக்கலாம், அதற்காக மற்றவர்களின் வலியை அவமதிக்காதீர்கள்” என நெட்டிசன்கள் ஸ்ரீலீலாவை வறுத்து எடுத்து வருகின்றனர்.
சினிமா உலகில் சமத்துவம் பேசும் அதே வேளையில், பெண்களின் இயற்கையான உடல் உபாதைகளை ‘சாக்கு’ என்று கொச்சைப்படுத்துவது ஆரோக்கியமானதல்ல எனப் பல சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். ஸ்ரீலீலா தனது மன உறுதியைக் காட்ட நினைத்தாரா அல்லது ஒட்டுமொத்தப் பெண்களின் வலியையும் சாதாரணமாகக் கருதினாரா என்ற விவாதம் தற்போது கோலிவுட் முதல் டோலிவுட் வரை சூடாகப் பேசப்பட்டு வருகிறது.