Posted in

நாம் இப்போது உலகப் போரில் இருக்கிறோம்: மோதலின் விளிம்பில் உலக வல்லரசுகள்! 

அமெரிக்காவின் பிரபல ஹெட்ஜ் ஃபண்ட் நிறுவனமான ‘பிரிட்ஜ்வாட்டர் அசோசியேட்ஸ்’ நிறுவனர் ரே டாலியோ, தற்போதைய உலக அரசியல் மற்றும் பொருளாதார சூழல்களை ஆராய்ந்து ஒரு திடுக்கிடும் அறிக்கையை வெளியிட்டுள்ளார். ரஷ்யா-உக்ரைன், இஸ்ரேல்-ஹமாஸ் மற்றும் தற்போது தீவிரமடைந்துள்ள அமெரிக்கா-ஈரான் மோதல்கள் அனைத்தும் தனித்தனி சம்பவங்கள் அல்ல என்றும், இவை அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு புதிய உலகப் போராக (World War 3) ஏற்கனவே உருவெடுத்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். “நாம் இப்போது உலகப் போரின் தொடக்கக் கட்டத்தில் இருக்கிறோம் என்பதைப் பலரும் உணரவில்லை” என்று அவர் தனது ‘டைம்’ (Time) இதழ் கட்டுரையில் எச்சரித்துள்ளார்.

ரே டாலியோவின் ‘பெரிய சுழற்சி’ (The Big Cycle) கோட்பாட்டின் படி, ஒரு வல்லரசு வீழ்ச்சியடைந்து புதிய சக்திகள் மேலெழும்போது 13 நிலைகளைக் கொண்ட ஒரு சுழற்சி ஏற்படும். இதில் தற்போது உலகம் 9-வது நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிடுகிறார். அதாவது, பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் போர்கள் நடப்பது (Multi-theater conflicts) இந்த நிலையின் முக்கிய அறிகுறியாகும். இன்னும் இரண்டு படிகள் கடந்தால், அதாவது 11-வது நிலையை எட்டும்போது, உலகப் பெரும் வல்லரசுகளுக்கு இடையே நேரடியான ராணுவ மோதல் (Direct Military Combat) வெடிக்கும் அபாயம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதார ரீதியாகப் பார்த்தால், வளர்ந்த நாடுகளின் அதிகப்படியான கடன் சுமை, உள்நாட்டு அரசியல் பிளவுகள் மற்றும் உலகளாவிய வர்த்தகத் தடைகள் ஆகியவை இந்த போருக்கான சூழலைத் தீவிரப்படுத்துகின்றன. அமெரிக்கா ஒருபுறமும், சீனா, ரஷ்யா, ஈரான் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் மற்றொரு துருவமாகவும் அணிதிரண்டு நிற்பது 1938-39 காலக்கட்டத்தை நினைவூட்டுவதாக டாலியோ கூறுகிறார். ஹார்முஸ் ஜலசந்தி போன்ற முக்கிய கடல்வழிப் பாதைகளில் ஏற்படும் தடைகள் உலகப் பொருளாதாரத்தை ஒரு மிகப்பெரிய முடக்கத்திற்கு (Financial Heart Attack) கொண்டு செல்லும் என்றும் அவர் கணித்துள்ளார்.

இத்தகைய இக்கட்டான சூழலில் முதலீட்டாளர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ‘தங்கம்’ (Gold) போன்ற பாதுகாப்பான சொத்துக்களில் முதலீடு செய்ய வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். நாணயங்களின் மதிப்பு வீழ்ச்சியடையும் போது தங்கம் மட்டுமே கைக்கொடுக்கும் என்பது அவரது வாதம். “சந்தைகள் இந்தப் போரை ஒரு குறுகிய கால நிகழ்வாகவே பார்க்கின்றன, ஆனால் இது நீண்ட காலத்திற்கு நீடிக்கும்” என்று கூறும் டாலியோ, வரவிருக்கும் 2026 அமெரிக்கத் தேர்தல்கள் மற்றும் உலகளாவிய அதிகார மாற்றங்களுக்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.