Posted in

பேச்சுவார்த்தையில் அமெரிக்கா அதிரடி; ஈரான் நிபந்தனையை நிராகரித்த வெள்ளை மாளிகை!

மத்திய கிழக்கில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் தலைமையிலான குழுவினர் இஸ்லாமாபாத்தில் முதல்முறையாக நேருக்கு நேர் சந்தித்துப் பேசினர். இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, கத்தாரில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் $6 பில்லியன் (சுமார் 50,000 கோடி ரூபாய்) நிதியை விடுவிக்க அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. ஹார்முஸ் ஜலசந்தியைத் திறப்பதற்கு ஈடாக இந்த நிதியை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.

இருப்பினும், இந்தச் செய்தியை வெள்ளை மாளிகை மாலை அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது. “ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க எந்தவித ஒப்பந்தமும் செய்யப்படவில்லை; அத்தகைய தகவல்கள் முற்றிலும் தவறானவை” என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 2018-ல் டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் முடக்கப்பட்ட இந்த நிதி, 2023-ல் மனிதாபிமான உதவிகளுக்காக மட்டும் பயன்படுத்த நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டது. ஆனால், அக்-7 இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு ஜோ பைடன் நிர்வாகம் இந்த நிதியை மீண்டும் முடக்கியது குறிப்பிடத்தக்கது.

ஈரான் தரப்பில், இந்த $6 பில்லியன் நிதியை விடுவிப்பது மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை நிறுத்துவது ஆகியவற்றைத் தங்களின் “சிவப்புக் கோடுகளாக” (Red Lines) அறிவித்துள்ளனர். இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பேச்சுவார்த்தை அர்த்தமற்றது என ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் எச்சரித்துள்ளார். ஆனால், ஜே.டி. வான்ஸ் தலைமையிலான அமெரிக்கக் குழுவினர், ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களைக் கைவிட வேண்டும் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை நிபந்தனையின்றித் திறக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளனர்.

தற்போது இஸ்லாமாபாத்தில் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தை 1979-ஆம் ஆண்டுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் மிக உயர்ந்த அளவிலான நேரடிச் சந்திப்பாகும். பொருளாதாரச் சுமையில் சிக்கியுள்ள ஈரான், இந்த நிதியைத் தனது நாட்டின் அத்தியாவசியத் தேவைகளுக்காகப் பெறத் துடிக்கிறது. ஆனால், ராணுவ ரீதியாகத் தான் முன்னிலையில் இருப்பதாகக் கருதும் அமெரிக்கா, எவ்வித முன்நிபந்தனைகளுமின்றி ஈரான் அடிபணிய வேண்டும் என எதிர்பார்க்கிறது. இந்தப் பொருளாதார மற்றும் ராணுவ இழுபறிகளால், இஸ்லாமாபாத் அமைதி மாநாட்டின் முதல் நாள் எந்தவிதமான முக்கிய முடிவுகளுமின்றி பெரும் பதற்றத்துடனேயே நிறைவடைந்துள்ளது.