யுகே-வில் உள்ள எசெக்ஸ் (Essex) பகுதியில், குடும்பத்தோடு வீட்டில் வளர்ந்த வளர்ப்பு நாயே 19 வயது இளம் பெண்ணைக் கடித்துக் கொன்ற சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேமி-லியா பிஸ்கோ (Jamie-Lea Biscoe) என்ற அந்தப் பெண், கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டில் இருந்தபோது, அவரோடேயே படுக்கையறையில் தங்கித் தூங்கும் செல்ல நாய் திடீரென அவரது கழுத்துப் பகுதியை ஆவேசமாகக் கடித்ததில் ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க உயிரிழந்தார்.
இந்தக் கோரச் சம்பவம் லீடன் ரோடிங் (Leaden Roding) என்ற கிராமத்தில் இரவு 10:45 மணியளவில் நடந்துள்ளது. தகவல் கிடைத்து போலீசார் விரைந்து வருவதற்குள் அந்தப் பெண்ணின் உயிர் பிரிந்துவிட்டது. இது குறித்துப் பேசிய அவரது பாட்டி டீனா வெல்ஸ், “அந்த நாய் கடந்த ஏழு வருடங்களாக எங்களுடனேயே இருந்தது; அது என் பேத்தியின் படுக்கையிலேயே அவளுடன் படுத்து உறங்கும். இப்படி ஒரு விபரீதம் நடக்கும் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை” என கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்த 37 வயது நபர் ஒருவரை, நாயைக் கவனக்குறைவாகக் கையாண்டது மற்றும் உயிரிழப்புக்குக் காரணமான நாய் மீது கட்டுப்பாட்டை இழந்தது போன்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர். அந்த நாய் ‘லர்ச்சர்’ (Lurcher) வகையைச் சேர்ந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த நாய் போலீசாரால் கைப்பற்றப்பட்டு ரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
எசெக்ஸ் போலீஸ் உயரதிகாரி ஸ்டூவர்ட் ஹூப்பர் கூறுகையில், “இந்தச் சம்பவம் அந்த ஊர் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த செல்லப் பிராணியே இப்படி ஒரு கொடூரத் தாக்குதலை நடத்தியது குறித்து அனுபவம் வாய்ந்த துப்பறியும் நிபுணர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். செல்லமாக வளர்த்த நாய், கழுத்தைக் கடித்து உயிரைப் பறித்த இந்தத் துயரச் சம்பவம் ஒட்டுமொத்த பிரிட்டனையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.