பிரிட்டனின் எம்1 (M1) நெடுஞ்சாலையில் லெய்செஸ்டர்ஷையர் அருகே உள்ள மேம்பாலத்தில் பயணம் செய்த நீல நிற கார் ஒன்று, எதிர்பாராத விதமாகப் பாலத்தின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு சுமார் 30 அடி ஆழத்தில் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த மினிபஸ் மீது விழுந்தது. கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் நிகழ்ந்த இந்த அதிர்ச்சியூட்டும் விபத்தில், காரில் இருந்த இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அப்பகுதியே போர்க்களம் போலக் காட்சியளித்தது.
பாலத்திலிருந்து விழுந்த கார், கீழே எம்1 நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஃபியட் டுகாடோ (Fiat Ducato) ரக மினிபஸ் மீது மோதியது. இதில் மினிபஸ்ஸில் பயணம் செய்த ஓட்டுநர் மற்றும் மூன்று பெண்கள் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் அதிர்ஷ்டவசமாக மினிபஸ் ஓட்டுநர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மற்ற மூன்று பெண்களும் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லெய்செஸ்டர்ஷையர் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த விபத்தைத் தொடர்ந்து எம்1 நெடுஞ்சாலையின் இருபுறமும் போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் மற்றும் விபத்து புலனாய்வுத் துறையினர் சம்பவ இடத்தில் பல மணிநேரம் ஆய்வு மேற்கொண்டனர். இதனால் அந்தச் சாலையில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டனர். சுமார் 15 மணிநேரத்திற்கும் மேலான மீட்புப் பணிகளுக்குப் பிறகே, சனிக்கிழமை அதிகாலை போக்குவரத்து மீண்டும் சீரானது. இருப்பினும், பாலத்தின் உறுதித்தன்மை குறித்துத் தொடர்ந்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
விபத்து நிகழ்ந்த கில்மார்டன் லேன் (Gilmorton Lane) பகுதியில் கார் எப்படித் தடம் மாறியது என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தின் போது அந்தப் பகுதியில் பயணித்த வாகன ஓட்டிகளிடம் ஏதேனும் ‘டேஷ்கேம்’ (Dashcam) வீடியோ பதிவுகள் இருந்தால் உடனடியாக ஒப்படைக்குமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிரிழந்த இளைஞர்களின் அடையாளங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இந்தத் துயரச் சம்பவம் பிரிட்டனில் சாலைப் பாதுகாப்பு மற்றும் மேம்பாலங்களின் பாதுகாப்பு அரண்கள் குறித்த புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.