Posted in

ஹார்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட டிரம்ப் உத்தரவு; அமெரிக்க கடற்படை அதிரடிப் படைவகுப்பு!

📅 வெளியானது: April 13, 2026 | இற்றைப்படுத்தப்பட்டது: April 12, 2026

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் கடந்த 21 மணி நேரமாக நடைபெற்ற உயர்மட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படாததால், அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (ஏப்ரல் 12, 2026) ஹார்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட அமெரிக்க கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளார். ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் மற்றும் கடல்வழிப் போக்குவரத்து குறித்த நிபந்தனைகளை ஈரான் ஏற்க மறுத்ததே இதற்குக் காரணமாகும். இதனைத் தொடர்ந்து, “உடனடியாக அமலுக்கு வரும் வகையில், ஹார்முஸ் ஜலசந்திக்குள் நுழையும் அல்லது வெளியேறும் அனைத்துக் கப்பல்களையும் அமெரிக்க கடற்படை தடுத்து நிறுத்தும்” என்று டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்தப் பகுதியில் ஈரான் சட்டவிரோதமாகக் கண்ணிவெடிகளை (Sea Mines) புதைத்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள அமெரிக்கா, அவற்றை அகற்றும் பணியில் தனது போர்க்கப்பல்களை ஈடுபடுத்தியுள்ளது. குறிப்பாக, சர்வதேச கடல் பகுதியில் ஈரானுக்கு ‘சுங்கக் கட்டணம்’ (Toll) செலுத்திப் பயணிக்கும் கப்பல்களைக் கண்டறிந்து சிறைபிடிக்கவும் (Interdict) கடற்படைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. “உலக நாடுகளை அச்சுறுத்திப் பணம் பறிக்கும் ஈரானின் செயலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்று கூறியுள்ள டிரம்ப், அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தும் எந்தவொரு ஈரானிய இலக்கும் உடனடியாகத் தகர்க்கப்படும் என எச்சரித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) எதிர்விினையாற்றியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி தங்களின் முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அமெரிக்காவின் இந்த முற்றுகை முயற்சியானது போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்கக் கப்பல்கள் அத்துமீறினால் அவை “மரணச் சுழலில்” (Deadly Vortex) சிக்க வேண்டியிருக்கும் என ஈரான் ராணுவத் தளபதிகள் எச்சரித்துள்ளனர். இதனால் உலகின் மிக முக்கியமான கச்சா எண்ணெய் போக்குவரத்துப் பாதை தற்போது ஒரு வெடிமருந்துக் கிடங்கு போல மாறியுள்ளது.

தற்போது ஜே.டி. வான்ஸ் தலைமையிலான தூதுக்குழுவினர் பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பியுள்ள நிலையில், அமெரிக்கா தனது அடுத்தகட்ட ராணுவ நடவடிக்கைக்குத் தயாராக உள்ளது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த ‘லாக் அண்ட் லோடட்’ (Locked and Loaded) நிலையில் இருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இந்த முற்றுகையானது சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், கச்சா எண்ணெய் விலையை விண்ணைத் தொடச் செய்யும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.