நீ என்ன நடுப்பது ? எல்லா நாட்டுக் கப்பல்களையும் நானே தடுக்கிறேன். இனி இந்த வழியால் எந்தக் கப்பலும் வராது. இனி எப்படி தாக்குவாய் ? என்று TRUMP ,ஈரானை பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார். அட கொசு வீட்டுக்குள் வந்து விட்டது என்று ஒருவன் வீட்டையே தீயிட்ட கதையா போச்சு இது.
மத்திய கிழக்கில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, உலகமே அஞ்சும் ஒரு அதிரடி அறிவிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். ஹோமுஸ் நீரிணையை (Strait of Hormuz) முற்றுகையிட்டு, அங்கிருந்து வெளியேறும் மற்றும் உள்ளே வரும் அனைத்து எண்ணெய் கப்பல்களையும் அமெரிக்க ராணுவம் தடுத்து நிறுத்தும் என ட்ரம்ப் சூளுரைத்துள்ளார். ஈரான் விதிக்கும் சட்டவிரோத சுங்க வரிகளைச் செலுத்தும் எந்தவொரு கப்பலும் சர்வதேச கடற்பரப்பில் பாதுகாப்பாகச் செல்ல முடியாது என எச்சரித்துள்ள ட்ரம்ப், இந்த விவகாரத்தில் ஈரானுக்குப் பொருளாதார ரீதியாகப் பெரும் நெருக்கடி கொடுக்கத் திட்டமிட்டுள்ளார்.
ஆனால், ட்ரம்பின் இந்த அதிரடிப் போக்கிற்குப் பிரிட்டன் பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் அறிவித்துள்ள கடற்படை முற்றுகையில் பிரிட்டன் இணையாது என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை நேட்டோ (NATO) நாடுகளுக்கு இடையே பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளதோடு, பிரிட்டனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. உலகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் இந்த நீரிணையில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதால், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் விடுத்துள்ள எச்சரிக்கையில், அமெரிக்க கடற்படை சர்வதேச கடல் பகுதியில் ஈரானுக்கு வரி செலுத்தும் ஒவ்வொரு கப்பலையும் இடைமறித்துச் சோதனை செய்யும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கண்ணிவெடி அகற்றும் கப்பல்களை அனுப்ப உள்ளதாக ட்ரம்ப் கூறியிருந்தாலும், பிரிட்டன் தரப்போ அந்தத் தகவலை மறுத்துள்ளது. சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை ஆதரிப்பதாகவும், ஆனால் ஒரு நாட்டின் மீது முற்றுகை இடுவது உலகளாவிய பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் என்றும் பிரிட்டன் அரசு செய்தித் தொடர்பாளர் கவலை வெளியிட்டுள்ளார்.
தற்போது பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்கி, ஹோமுஸ் நீரிணையில் அமைதியான முறையில் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. “எங்கள் நாட்டின் வாழ்வாதாரச் செலவுகளைக் கருத்தில் கொண்டும், உலகப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் இந்த நீரிணை திறந்திருக்க வேண்டியது அவசியம்” என ஸ்டார்மர் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. ட்ரம்பின் ஆக்ரோஷமான முடிவும், அதற்கு ஸ்டார்மர் காட்டும் எதிர்ப்பும் சர்வதேச அரசியலில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளன.