“தமிழ்நாட்டில் ஈழம் வேண்டுமா? வேண்டாமா?” என்று கூட இலகுவாகத் தேர்தல் நடத்தி முடித்துவிடலாம். ஆனால், இந்த லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் கோவில் தேர்தல் இருக்கிறதே… அது ஒரு மகாபாரத யுத்தத்திற்குச் சமமான அரசியல்! அந்தத் துர்க்கை அம்மன் என்ன பாவம் செய்தாரோ தெரியவில்லை, அந்த அளவுக்கு அங்கே பிடுங்குப்பாடுகள், அடிதடி, ஊத்தை அரசியல் என எல்லாமே அரங்கேறும். இந்தக் கோவிலுக்குத் தர்மகர்த்தாவாக (தலைவராக) மகுடம் சூட்டிக்கொள்ள வேண்டும் என்பது லண்டனில் உள்ள சில ‘முக்கிய புள்ளிகளின்’ தீராத வாழ்நாள் ஆசை.
தேர்தல் என்று அறிவிப்பு வந்தாலே போதும்; ஊரில் உள்ளவர்கள் மூன்று, நான்கு கோஷ்டிகளாகப் பிரிந்துவிடுவார்கள். வீடு வீடாகச் சென்று வாக்குக் கேட்டு கெஞ்சுவதில் தொடங்கி, கடைசியில் அடாவடி அரசியலில் முடிப்பார்கள். “அடேங்கப்பா! இவர்கள் இப்படி முண்டியடிப்பது ஏதோ கோவில் தொண்டு செய்யவா?” என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். அந்தத் ‘தொண்டைப்’ பற்றிப் பேச ஆரம்பித்தால் கோவில் நிர்வாகம் சண்டைக்கு வந்துவிடும். லண்டனில் காசு மழையாகப் பொழியும் கோவில்களில் ஈலிங் அம்மன் கோவிலும் ஒன்று. அப்படியிருக்க, அங்கே தர்மகர்த்தாவாக வலம் வர யாருக்குத்தான் பிடிக்காது?
ஒரு வழியாக அடிபிடி, வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. எமக்குக் கிடைத்த அந்த ‘அதிர்ச்சி’த் தகவல்களை இங்கே தருகிறோம் பாருங்கள். ஒரு வழியாக ஒருவரை ஒருவர் முட்டிக்கொண்டு, கடைசியில் வாக்குப் போட்டு தலைவர், துணைத் தலைவர், பொருளாளர், துணைப் பொருளாளர் மற்றும் செயலாளர் ஆகியோரைத் தெரிவு செய்துள்ளார்கள். அமெரிக்க செனட் சபையில் கூட இவ்வளவு வாதங்கள் நடக்காது; அந்த அளவுக்கு ரணகளமாக இந்தத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.
நல்லகாலமாக இனி இரண்டு வருடங்களுக்குத் தேர்தல் இல்லை என்பதால், அந்தப் பகுதியில் அமளிதுமளி இருக்காது என்று நம்பலாம். இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால், இந்தத் தேர்தலிலும் ‘செல்லாத வாக்குகள்’ விழுந்திருக்காம்… பாருங்கோ! யார் யார் போட்டியிட்டார்கள், யாருக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தன என்கிற முழு விபரம் இதோ கீழே… (அதிர்வுக்காக -கண்ணன்)

