பிரிட்டனில் வருங்காலத் தலைமுறையினரை புகையிலை பழக்கத்திலிருந்து முற்றிலும் பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க “புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா” (Tobacco and Vapes Bill), அந்நாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, ஜனவரி 1, 2009 அல்லது அதற்குப் பிறகு பிறந்த எவருக்கும் பிரிட்டனில் சட்டப்பூர்வமாகப் புகையிலை பொருட்களை விற்பனை செய்ய முடியாது. அதாவது, தற்போது 17 வயது அல்லது அதற்குக் குறைவான வயதுடையவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு “புகையில்லா தலைமுறை”யை (Smoke-free generation) உருவாக்குவதே அரசின் லட்சியமாகும்.
இந்த மசோதா கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. நீண்ட விவாதங்கள் மற்றும் பல கட்டப் பரிசீலனைகளுக்குப் பிறகு, ஏப்ரல் 21, 2026 (செவ்வாய்க்கிழமை) அன்று பிரபுக்கள் சபையில் (House of Lords) இறுதி ஒப்புதல் பெற்றது. அடுத்த வாரம் இதற்கு அரச முத்திரை (Royal Assent) கிடைத்தவுடன் இது அதிகாரப்பூர்வச் சட்டமாக மாறும். இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும்போது, சிகரெட் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு ஒவ்வோர் ஆண்டும் ஒரு வயது உயர்த்தப்படும். இதனால் 2009-ல் பிறந்தவர்கள் ஒருபோதும் சட்டப்பூர்வமாகச் சிகரெட் வாங்க முடியாத நிலை ஏற்படும்.
சிகரெட் மட்டுமின்றி, சிறுவர்களைக் கவரும் வகையில் விற்கப்படும் ‘வேப்ஸ்’ (Vapes) எனப்படும் மின்-சிகரெட்டுகளுக்கும் இந்தச் சட்டம் கடும் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. குழந்தைகளின் விளையாட்டு மைதானங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வெளியே வேப்பிங் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுவர்கள் இருக்கும் கார்களுக்குள் வேப்பிங் செய்வது குற்றமாகக் கருதப்படும். வேப் தயாரிப்புகளின் சுவைகள் (Flavors) மற்றும் பேக்கேஜிங் முறைகளை ஒழுங்குபடுத்த அமைச்சர்களுக்குப் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பொதுச் சுகாதாரத்தைப் பாதுகாப்பதில் உலகிற்கே இது ஒரு முன்னோடித் திட்டமாகப் பார்க்கப்படுகிறது.
பிரிட்டனில் ஆண்டுதோறும் சுமார் 80,000 இறப்புகள் புகையிலை பழக்கத்தால் ஏற்படுகின்றன. இது அந்நாட்டின் தேசிய சுகாதாரச் சேவைக்கு (NHS) பெரும் சுமையை ஏற்படுத்துகிறது. “வருமுன் காப்பதே சிறந்தது; இந்தச் சீர்திருத்தம் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றுவதோடு, NHS மீதான அழுத்தத்தைக் குறைக்கும்” எனச் சுகாதாரத் துறை அமைச்சர் வெஸ் ஸ்டீரிட்டிங் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 2040-ம் ஆண்டுக்குள் இளைஞர்களிடையே புகைப்பிடிக்கும் பழக்கம் 5 சதவீதத்திற்கும் கீழாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாலத்தீவைத் தொடர்ந்து இத்தகைய தலைமுறைத் தடையைக் கொண்டுவந்த இரண்டாவது நாடாக பிரிட்டன் உருவெடுத்துள்ளது.