Posted in

ஈரானில் ராணுவ ஆட்சி ? சிவில் தலைவர்களை ஓரங்கட்டி அதிகாரத்தைக் கைப்பற்றியது புரட்சிகரக் காவல் படை

📅 வெளியானது: April 22, 2026

ஈரானின் அரசியல் கட்டமைப்பில் ஒரு மிகப்பெரிய அதிரடி மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அந்நாட்டின் சிவில் தலைவர்களை முழுமையாக ஓரங்கட்டிவிட்டு, ஈரானிய புரட்சிகரக் காவல் படை (IRGC) நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் போர் சூழலைப் பயன்படுத்தி, சிவில் அரசாங்கத்தின் முடிவுகளை ரத்து செய்யும் அளவிற்கு IRGC ஒரு மேலாதிக்க சக்தியாக உருவெடுத்துள்ளது. வாஷிங்டனைச் சேர்ந்த ஆய்வு நிறுவனங்களின் (ISW) அறிக்கையின்படி, IRGC தளபதி அகமது வாஹிதி, ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியுடன் இணைந்து நேரடியாக ராணுவ மற்றும் அரசியல் முடிவுகளை எடுத்து வருவதாகத் தெரிகிறது.

ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சராக அப்பாஸ் அராக்சி மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் ஆகியோர் பெயரளவில் பதவியில் இருந்தாலும், IRGC-யின் ஒப்புதல் இன்றி அவர்களால் எந்த ஒரு சிறிய முடிவையும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்குச் சான்றாக, கடந்த வெள்ளிக்கிழமை ஹார்முஸ் ஜலசந்தி வணிகக் கப்பல்களுக்காகத் திறக்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவித்தார். ஆனால், அடுத்த 24 மணிநேரத்திற்குள் அவரது முடிவை அதிரடியாக ரத்து செய்த IRGC, அந்த வழித்தடத்தை மீண்டும் மூடுவதாக அறிவித்தது. இது ஈரான் அரசாங்கத்திற்குள் சிவில் தலைவர்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்பதை உலகுக்குத் தெளிவுபடுத்தியுள்ளது.

ஈரானின் அதிபர் மசூத் பெசெஷ்கியான் கூட தற்போது பொம்மைத் தலைவராகவே மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் பதவிக்கு ஐஆர்ஜிசி தளபதிகளின் விருப்பத்திற்கு மாறாக அவரால் யாரையும் நியமிக்க முடியவில்லை. குறிப்பாக, தளபதி அகமது வாஹிதி விடுத்த மிரட்டலைத் தொடர்ந்து, முகமது பாகர் சொல்காத்ர் என்பவரை அந்தப் பதவிக்கு நியமிக்க அதிபர் வற்புறுத்தப்பட்டார். “போர்க்காலச் சூழலில் நாட்டின் அனைத்து முக்கிய முடிவுகளையும் புரட்சிகரக் காவல் படை மட்டுமே எடுக்க வேண்டும்” என வாஹிதி வெளிப்படையாகவே முழங்கி வருவது, ஈரானில் ஒரு மறைமுக ராணுவ ஆட்சி நடப்பதையே உறுதி செய்கிறது.

1979-ல் அயதுல்லா கொமேனியால் ஒரு சிறிய துணை ராணுவப் படையாகத் தொடங்கப்பட்ட இந்த IRGC, இன்று ஈரானின் பொருளாதாரம் மற்றும் ராணுவத்தின் முதுகெலும்பாக மாறியுள்ளது. முறைப்படியான ராணுவப் பயிற்சி என்பதை விட, இஸ்லாமியப் புரட்சியின் மீதான தீவிர விசுவாசத்தையே அடிப்படையாகக் கொண்ட இந்த அமைப்பு, எண்பதுகளில் நடந்த ஈரான்-ஈராக் போரின் மூலம் அசுர வளர்ச்சி அடைந்தது. தற்போது ஈரானின் உச்ச தலைவருக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டிய நிலையில் உள்ள IRGC, அமெரிக்கா போன்ற நாடுகளுடனான பேச்சுவார்த்தைகளையும் முடக்கி வைத்துள்ளது. இந்த அதிகாரக் குவிப்பு ஈரானை ஒரு தீவிரவாதப் பாதையை நோக்கி அழைத்துச் செல்வதாக உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.