டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களைச் சாதகமாகப் பயன்படுத்தி, சமூக வலைதளங்களில் போலி தகவல்களையும் வதந்திகளையும் பரப்பி கலவரத்தைத் தூண்ட முயன்ற 400-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பின்னணி கொண்ட சமூக வலைதளக் கணக்குகளை டெல்லி காவல்துறை அதிரடியாகக் கண்டறிந்து முடக்கியுள்ளது. இந்த இணையவழிச் சதித்திட்டம் குறித்து டெல்லி காவல்துறை பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி காவல் துணை ஆணையர் (DCP) சுமித் ஜா, “இந்தியாவில் நடைபெறும் அமைதியான போராட்ட சூழலைச் சாதகமாகப் பயன்படுத்தி, எடிட் செய்யப்பட்ட போலி வீடியோக்கள் மற்றும் பொய்யான தகவல்கள் மூலமாக மாணவர்களின் கவனத்தைத் திசைதிருப்பவும், பொதுமக்களைத் தூண்டிவிடவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை இதுபோன்று வதந்திகளைப் பரப்பிய 400-க்கும் அதிகமான பாகிஸ்தானைச் சேர்ந்த எக்ஸ் (X) மற்றும் சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindoor) நிகழ்வின் போது இந்தியாவுக்கு எதிராகப் போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்ட அதே பாகிஸ்தான் நெட்வொர்க் கணக்குகளே, தற்போது நீட் தேர்வுப் போராட்டக் களத்திலும் மாணவர்களைத் தவறாக வழிநடத்த மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளதாகக் காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர். செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் போலி புகைப்படங்களைப் பயன்படுத்தி இந்திய எல்லைக்குள் குழப்பத்தை விளைவிப்பதே இதன் முக்கிய நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களின் பாதுகாப்பு கருதி, பெயரில்லாத கணக்குகள் (Anonymous Handles) மற்றும் சரிபார்க்கப்படாத சமூக வலைதளப் பதிவுகளை நம்பவோ அல்லது பரப்புவதோ செய்ய வேண்டாம் என டெல்லி காவல்துறை அன்போடு கேட்டுக்கொண்டுள்ளது. ஜனநாயக ரீதியிலான அமைதி வழியிலான போராட்டங்களை டெல்லி காவல்துறை எப்போதும் மதிப்பதாகவும், ஆனால் இதுபோன்ற அன்னியச் சமூக விரோத சக்திகளின் வதந்திகளுக்குப் பலியாகி உணர்ச்சவசப்பட வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.