இந்திய தலைநகர் புது தில்லியில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ள ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த சர்வதேச கவலைகளுக்குப் பதிலளித்துள்ளார். “ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை உருவாக்க விரும்பியதில்லை; அது எங்களின் கொள்கையிலேயே கிடையாது. நாங்கள் எப்போதும் அமைதியான வழியிலான அணுசக்திப் பயன்பாட்டையே விரும்புகிறோம்” என்று அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார். 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தின் போது இதை ஈரான் ஏற்கனவே நிரூபித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் நடைபெற்று வரும் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் குறித்து அவர் முக்கியத் தகவலைப் பகிர்ந்துள்ளார். ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் மற்றும் அதன் இருப்பு தொடர்பான விவகாரங்கள் மிகவும் சிக்கலானவை என்பதால், தற்போது நிலவி வரும் முட்டுக்கட்டையைத் தவிர்க்க அந்த விவாதங்களை மட்டும் பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டங்களுக்கு ஒத்திவைக்க அமெரிக்காவுடன் ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக அரக்சி கூறியுள்ளார். இது இப்போதைக்குச் சர்வதேசப் பதற்றத்தைத் தற்காலிகமாகக் குறைக்க உதவும் எனத் தெரிகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்களைக் கடுமையாகச் சாடிய அரக்சி, இந்தப் போரில் பொதுமக்களும் உள்கட்டமைப்புகளும் இலக்கு வைக்கப்படுவதை உலக நாடுகள் கண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். குறிப்பாக, ஈரானின் மினாப் (Minab) பகுதியில் உள்ள பள்ளிகள் மீதான தாக்குதல்களைச் சுட்டிக்காட்டிய அவர், உலகளாவிய நிர்வாக அமைப்புகளில் சீர்திருத்தம் அவசியம் என்றும் வலியுறுத்தினார். “அமெரிக்காவின் முரண்பாடான செய்திகளே பேச்சுவார்த்தைகளில் பெரும் தடையாக உள்ளன” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான இந்தப் பேச்சுவார்த்தைகள் ஒரு ‘கடினமான பாதையில்’ செல்வதாகவும், வாஷிங்டன் மீது தங்களுக்குத் துளியும் நம்பிக்கை இல்லை என்றும் அரக்சி வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இருப்பினும், போர் நிறுத்தத்தை எட்டவும், பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தவும் ஈரான் இராஜதந்திர ரீதியாகத் தொடர்ந்து முயற்சி செய்யும் என்றார். குறிப்பாக, இந்தியாவிற்குச் மத்திய ஆசியாவிற்கான ‘தங்க நுழைவாயிலாக’ சபஹார் துறைமுகம் (Chabahar Port) விளங்கும் என்றும், இரு நாடுகளின் உறவு வரலாற்றில் வேரூன்றியது என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.