சுவிட்சர்லாந்தின் பிரபல கடிகார நிறுவனமான ஸ்வாட்ச் மற்றும் சொகுசு கடிகார தயாரிப்பு நிறுவனமான ‘ஆடிமர்ஸ் பிகே’ (Audemars Piguet) இணைந்து ‘ராயல் பாப்’ (Royal Pop) என்ற புதிய ரக பாக்கெட் கடிகாரத்தை அறிமுகப்படுத்தின. 335 பவுண்டுகள் (சுமார் ₹35,000) விலையுள்ள இந்தக் கடிகாரத்தை வாங்குவதற்காக லண்டன், கார்டிஃப், மான்செஸ்டர் மற்றும் லிவர்பூல் ஆகிய நகரங்களில் உள்ள கடைகளுக்கு வெளியே மக்கள் கடந்த இரண்டு நாட்களாகவே முகாமிட்டிருந்தனர். இன்று (மே 18, 2026) காலை கடைகள் திறக்கப்பட்டபோது, நூற்றுக்கணக்கானோர் ஒரே நேரத்தில் உள்ளே நுழைய முயன்றதால் ‘ஸ்டாம்பீட்’ (Stampede) எனப்படும் நெரிசல் ஏற்பட்டுப் பெரும் பரபரப்பு நிலவியது.
கார்டிஃப் நகரின் ‘செயிண்ட் டேவிட்ஸ்’ வணிக வளாகத்தில் இருந்த ஸ்வாட்ச் கடைக்கு வெளியே சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு ஓடியதில் பலருக்குக் காயம் ஏற்பட்டது. “மக்கள் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி மிதிபடும் சூழல் உருவானது; நான் எனது மகனைப் பாதுகாக்கப் போராடினேன்” என அங்கிருந்த வாடிக்கையாளர் ஒருவர் உருக்கத்துடன் தெரிவித்தார். நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால், காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாக 25 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். லிவர்பூல் நகரிலும் வன்முறை மற்றும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.
இந்தக் கலவரத்தைத் தொடர்ந்து, ஸ்வாட்ச் நிறுவனம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. “எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, லண்டனில் உள்ள அனைத்துக் கடைகளும், கார்டிஃப், கிளாஸ்கோ, ஷெஃபீல்ட் உள்ளிட்ட நாட்டின் பிற முக்கிய நகரங்களில் உள்ள கிளைகளும் இன்று மூடப்படுகின்றன” என்று நிறுவனம் தெரிவித்தது. இந்தக் கடிகாரங்கள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படாமல், கடைகளில் மட்டுமே நேரடியாகக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டதே இந்தக் கூட்ட நெரிசலுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. 335 பவுண்டுகள் மதிப்புள்ள இந்த வாட்ச்கள், மறுவிற்பனைச் சந்தையில் (Resale) 16,000 பவுண்டுகள் வரை விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
தற்போது கடைகள் மூடப்பட்டுள்ளதால் ஏமாற்றமடைந்த வாடிக்கையாளர்கள், “முறையான கூட்டக் மேலாண்மை இல்லாததே இந்த அவல நிலைக்குக் காரணம்” என நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளனர். இருப்பினும், இந்த ‘ராயல் பாப்’ கலெக்ஷன் இன்னும் சில மாதங்களுக்குக் கிடைக்கும் என்பதால் மக்கள் பொறுமை காக்க வேண்டும் என ஸ்வாட்ச் வேண்டுகோள் விடுத்துள்ளது. உலகளவில் துபாய் மற்றும் நியூயார்க் நகரங்களிலும் இதே போன்ற கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் அங்கேயும் விற்பனை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரு கைக்கடிகாரத்திற்காக மக்கள் இவ்வளவு ஆக்ரோஷமாக நடந்துகொண்டது பிரிட்டன் ஊடகங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.