Posted in

வாசனைத் திரவியம் திருடியதாகக் கூறி கங்கோ இளைஞர் கழுத்தை நசுக்கிக் கொலை; டப்ளினில் வெடித்த போராட்டம்!

அயர்லாந்து நாட்டின் தலைநகரான டப்ளினில் (Dublin) உள்ள ‘அர்நாட்ஸ்’ (Arnotts) என்ற புகழ்பெற்ற மாபெரும் வணிக வளாகத்தில் கடந்த வாரம் வாசனைத் திரவியம் (Perfume) ஒன்றை திருடியதாகக் கூறி, காங்கோ நாட்டைச் சேர்ந்த ஈவ்ஸ் சகிலா (Yves Sakila – 35) என்ற கருப்பின இளைஞர் பாதுகாப்பு ஊழியர்களால் பிடித்து வைக்கப்பட்டார். அப்போது ஐந்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு ஊழியர்கள் அவரை நடைபாதையில் குப்புறத் தள்ளி, சுமார் ஐந்து நிமிடங்கள் கொடூரமான முறையில் அமுக்கிப் பிடித்தனர். இதில் மூச்சுத்திணறி சுயநினைவை இழந்த அந்த இளைஞர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அயர்லாந்து முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூரமான சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்வதேச அளவில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. அதில், பாதுகாப்பு ஊழியர்களில் ஒருவர் சகிலாவின் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் தனது முழங்காலை வைத்துக் கொடூரமாக அழுத்துவது பதிவாகியுள்ளது. இது கடந்த 2020-ஆம் ஆண்டு அமெரிக்காவில் போலீஸ் அதிகாரியால் கழுத்து நசுக்கிக் கொல்லப்பட்ட கருப்பின மனிதர் ஜார்ஜ் பிளாய்டின் மரணத்தை அச்சு அசலாக நினைவூட்டுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், இந்த விவகாரத்தை அயர்லாந்தின் ‘ஜார்ஜ் பிளாய்ட் தருணம்’ (Ireland’s George Floyd moment) என மனித உரிமை ஆர்வலர்கள் வர்ணித்துள்ளனர்.

ஈவ்ஸ் சகிலாவின் இந்த கொடூர மரணத்திற்கு நீதி கேட்டு, அயர்லாந்து நாடாளுமன்றக் கட்டடத்தின் முன்பாகவும், அவர் உயிரிழந்த வணிக வளாகத்தின் வெளியிலும் நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் கருப்பின அமைப்பினர் திரண்டு வந்து விஸ்வரூபப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “மறைக்காதே, தாமதிக்காதே”, “நீதி வேண்டும்” மற்றும் “அனைவருக்கும் வரவேற்பு” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர். தகவல் தொழில்நுட்பத் துறையில் (IT) பணியாற்றி, சமீபகாலமாக வீடற்றவராக மாறியிருந்த சகிலா, மிகவும் அமைதியானவர் என்றும், ஒரு பாட்டில் சென்ட் திருடியதற்காக ஒரு மனிதனை இப்படி நரபலி கொடுப்பதா என்றும் அவரது முன்னாள் பள்ளித் தோழர்கள் கண்ணீருடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து அயர்லாந்து பிரதமர் மைக்கேல் மார்ட்டின் (Micheal Martin) மற்றும் நீதித்துறை அமைச்சர் ஆகியோர் தங்களின் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளதோடு, இதுகுறித்து மிகத் தீவிரமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர். அயர்லாந்து தேசிய போலீஸ் படையினர் (Garda) இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், பிரேதப் பரிசோதனை முடிவுகளைத் தற்போதைக்கு வெளியிட மறுத்துள்ளனர். அண்மைக்காலமாக அயர்லாந்தில் குடியேறியவர்களுக்கு எதிரான சில வலதுசாரி வன்முறைகள் அதிகரித்து வரும் சூழலில், இந்தச் சித்திரவதை மரணம் அந்நாட்டின் சட்டம்-ஒழுங்கு மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பு மீதான நம்பிக்கையை உலுக்கியுள்ளது.