தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்திய தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், தூத்துக்குடி போக்சோ (POCSO) சிறப்பு நீதிமன்றம் இன்று (மே 25) தனது இறுதித் தீர்ப்பை வழங்கவுள்ளது. கடந்த மார்ச் மாதம் அரங்கேறிய இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பான அனைத்து தரப்பு விசாரணைகளும், சாட்சியப் பதிவுகளும் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனமும் இந்தத் தீர்ப்பின் மீது குவிந்துள்ளது .
கடந்த மார்ச் 10 ஆம் தேதி விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவி, இரவு நேரத்தில் இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது மர்மமான முறையில் காணாமல் போனார் . மறுநாள் காலை, ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த புதர் பகுதியில் உடலில் பலத்த காயங்களுடன் அந்த மாணவி சடலமாக மீட்கப்பட்டார். அவர் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டது முதற்கட்ட விசாரணையில் உறுதியாகி தமிழகத்தையே உலுக்கியது
இக்கொடூரக் கொலையைக் கண்டித்தும், குற்றவாளியை உடனடியாகக் கைது செய்யக் கோரியும் உறவினர்களும் பொதுமக்களும் சடலத்தை வாங்க மறுத்து ஒன்பது நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் உரிய நேரத்தில் எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யாமல் அலட்சியமாகச் செயல்பட்ட விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீணா மற்றும் குளத்தூர் உதவி ஆய்வாளர் ஆகியோர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அதன்பின், சிசிடிவி காட்சிகளின் துணையோடு நடத்தப்பட்ட அறிவியல் பூர்வ விசாரணையில், ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று ஜாமீனில் வெளியே வந்திருந்த ராமநாதபுரம் சாயல்குடியைச் சேர்ந்த ரவுடி தர்ம முனீஸ்வரன் (38) என்பவனைப் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நீதிமன்றத்தில் மிகக் குறுகிய காலத்தில் போர்க்கால அடிப்படையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு விவாதப் பொருளாக மாறியுள்ள இந்த அசாதாரண அரசியல் சூழலில், இந்த வழக்கில் இன்று அறிவிக்கப்படவுள்ள போக்சோ நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு, குற்றவாளிகளுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாக அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.