ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எப்போதுமே தனது உடலமைப்பை மிகவும் இளமையாகவும் மிடுக்காகவும் வைத்துக்கொள்வதில் தீவிர ஆர்வம் காட்டுபவர். 73 வயதைக் கடந்த போதிலும் அவரது முகத்தில் சுருக்கங்கள் இல்லாமல் பளபளவென இருப்பதன் பின்னணியில் பல கோடி ரூபாய் செலவிலான பிளாஸ்டிக் சர்ஜரிகள் (Plastic Surgery) மற்றும் அழகு கலை சிகிச்சைகள் இருப்பதாகப் பிரிட்டனின் முன்னணி ஊடகம் ஒன்று தற்போது பரபரப்பு புள்ளிவிவரங்களை வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளது .
அந்தப் புலனாய்வு அறிக்கையின்படி, புதின் தனது தொங்கிப்போன கண் இமைகளைச் சீரமைக்கும் ‘சாகி ஐ’ (Saggy Eye Blepharoplasty) அறுவை சிகிச்சைக்காக மட்டும் சுமார் 6,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் தோராயமாக ₹6.5 லட்சம்) செலவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், வயதாவதால் ஒடுங்கிப்போகும் கன்னங்கள் மற்றும் தாடைப் பகுதியை இளமையாகக் காட்ட, பிரத்யேக ‘சின் ஃபில்லர்ஸ்’ (Chin Fillers) மற்றும் போடோக்ஸ் (Botox) ஊசிகளுக்காக ஒவ்வொரு முறையும் 1,200 பவுண்டுகள் வரை வாரி இறைத்துள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் நடந்த ஒரு மாநாட்டின் போது, புதினின் கண்கள் மற்றும் கன்னப் பகுதிகளில் கடுமையான கன்றிப்போன தழும்புகள் (Bruises) காணப்பட்டன . அப்போது அவர் போடோக்ஸ் சிகிச்சை எடுத்துக்கொண்டதால் ஏற்பட்ட பக்கவிளைவு அதுவென சர்வதேச ஊடகங்கள் எழுதின. ஆனால், அதை மறுத்த ரஷ்ய அதிபரின் மாளிகையான கிரெம்ளின் (Kremlin), “அதிபர் அதிக சோர்வாக இருக்கிறார், ஒளியின் மாறுபட்ட வெளிச்சத்தால் முகம் அப்படித் தெரிகிறது” என மழுப்பியது..
இருப்பினும், பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர்களின் கூற்றுப்படி, புதினின் தற்போதைய முகம் இயற்கை விதிகளுக்கு மாறாக அளவுக்கு அதிகமாக இறுக்கமாகவும், வீங்கிய பந்து போலவும் (Puffy Face) காட்சியளிப்பதே அவர் தொடர்ந்து செயற்கை ஊசிகளைப் பயன்படுத்தி வருவதற்கான அப்பட்டமான சான்று என உறுதிப்படுத்துகின்றனர். ரஷ்யாவில் புதிய முகங்களுக்கு இடமில்லை என்ற விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கவே, புதின் தன் முகத்தையே மாற்றி இளமையாகக் காட்டிக் கொள்கிறார் என்ற கேலிப் பேச்சுகளும் தற்போது சர்வதேச அரங்கில் பரவி வருகின்றன.