அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான புளூ ஆர்ஜின் (Blue Origin) தயாரித்துள்ள பிரம்மாண்டமான ‘நியூ கிளென்’ (New Glenn) ராக்கெட், புளோரிடாவில் உள்ள ஏவுதளத்தில் சோதனை ஓட்டத்தின் போது திடீரென வெடித்துச் சிதறி விபத்துக்குள்ளானது. அமெரிக்காவின் கேப் கனாவெரல் (Cape Canaveral) விண்வெளி மையத்தில் உள்ள ஏவுதளம் 36-ல், ராக்கெட்டின் இன்ஜின்களை தரையோடு பிணைத்து இயக்கிப் பார்க்கும் ‘ஹாட்ஃபயர்’ (Hotfire test) எனப்படும் நிலையான சோதனை நேற்று இரவு 9 மணியளவில் நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக ராக்கெட் பயங்கர சத்தத்துடன் வெடித்து, விண்வெளி மையமே அதிரும் வகையில் ராட்சத நெருப்புப் பிழம்பாக மாறியது.
இந்தக் கொடூர விபத்து நடந்த சில விநாடிகளிலேயே ஒட்டுமொத்த ஏவுதளமும் கரும்புகையாலும், தீயினாலும் சூழ்ந்தது. இந்த வெடிச்சத்தத்தின் அதிர்வால் அருகில் உள்ள கோகோ பீச் மற்றும் கேப் கனாவெரல் பகுதிகளில் இருந்த குடியிருப்பு வீடுகள் குலுங்கின. அதிர்ஷ்டவசமாக, இந்தச் சோதனையின் போது பாதுகாப்பு நெறிமுறைகள் துல்லியமாகப் பின்பற்றப்பட்டதால், ஏவுதளத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என்பதை புளூ ஆர்ஜின் நிறுவனம் மற்றும் அமெரிக்க விண்வெளிப் படை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
அடுத்த வாரம் அமேசான் நிறுவனத்தின் ‘புராஜெக்ட் கைப்பர்’ (Project Kuiper) திட்டத்திற்கான 48 இணைய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான நான்காவது திட்டத்திற்கு இந்த நியூ கிளென் ராக்கெட் தயார் செய்யப்பட்டு வந்தது. விபத்து நடந்த சமயத்தில் அதிர்ஷ்டவசமாக இந்த விலைமதிப்பற்ற செயற்கைக்கோள்கள் ராக்கெட்டுடன் இணைக்கப்படாததால், அமேசான் நிறுவனத்திற்குப் பல மில்லியன் டாலர் மதிப்பிலான வன்பொருள் இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. விண்வெளித் துறையில் இத்தகைய தோல்விகள் சாதாரணமானது என்று குறிப்பிட்டுள்ள ஜெஃப் பெசோஸ், “இது மிகவும் கடினமான நாள், ஆனால் எதை மீண்டும் கட்டமைக்க வேண்டுமோ அதைச் செய்து நாங்கள் மீண்டும் பறப்போம்” என்று எக்ஸ் (X) தளத்தில் நம்பிக்கையோடு பதிவிட்டுள்ளார்.
இலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்திற்குப் போட்டியாக உருவாக்கப்பட்டு வரும் இந்த 29 அடுக்கு மாடி உயர நியூ கிளென் ராக்கெட் விபத்துக்குள்ளானது, ஜெஃப் பெசோஸின் விண்வெளிப் பயணத் திட்டங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நாசாவின் (NASA) மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் ‘ஆர்ட்டெமிஸ்’ (Artemis) திட்டத்திலும் இந்த ராக்கெட் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்துக்கான பின்னணி மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் குறித்து புளூ ஆர்ஜின் மற்றும் நாசா விஞ்ஞானிகள் இணைந்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.