Posted in

புதினின் பொய் அம்பலம்: உக்ரைன் மீது வீசப்பட்ட அதிநவீன ‘ஒரேஷ்னிக்’ ஏவுகணை 9 ஆண்டுகள் பழமையானது!

ரஷ்யா அதிநவீன மற்றும் உலகின் மிக ஆபத்தான ஆயுதம் எனப் பெருமையுடன் கூறி வரும் அணுஆயுதங்களைச் சுமந்து செல்லும் ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை உண்மையில் முற்றிலும் புதிய தொழில்நுட்பம் அல்ல என்றும், அது சுமார் 9 ஆண்டுகள் பழமையானது என்றும் உக்ரைன் நாட்டின் ஏவுகணை தடயவியல் நிபுணர்கள் (Missile Forensics Experts) அதிரடியாகக் கண்டுபிடித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் உக்ரைனின் மேற்குப் பகுதியான எல்விவ் (Lviv) மாகாணத்தில் உள்ள எரிவாயு கிடங்கின் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய பயங்கரத் தாக்குதலின் போது மீட்கப்பட்ட ஒரேஷ்னிக் ஏவுகணையின் சிதைந்த பாகங்கள் மற்றும் மின்னணு சர்க்யூட் பலகைகளை (Electronic circuitry) விரிவாக ஆய்வு செய்ததில் இந்த உண்மை அம்பலமாகியுள்ளது.

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் தடைகள் கொள்கைக்கான தூதர் விளாட்ஸ்லாவ் விளாசிக் முன்னிலையில் கிய்வ் நகரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், இந்த ஏவுகணையின் முக்கிய பாகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த ஆய்வில் பங்கேற்ற ‘பெட்ரோ’ என்ற உக்ரைன் நிபுணர் கூறுகையில், இந்த ஏவுகணையானது கடந்த 2017 ஆம் ஆண்டிலேயே முழுமையாக அசெம்பிள் செய்யப்பட்டுள்ளது என்றும், இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் பாகங்கள் 2016 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவை என்றும் குறிப்பிட்டுள்ளார். இது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் கூற்றுகளை முற்றிலுமாகப் பொய்யாக்கியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

ரஷ்ய அதிபர் புதின் இந்த ஒரேஷ்னிக் இடைநிலை வரம்பு பாலிஸ்டிக் ஏவுகணையை (IRBM) சோவியத் காலத்து ஆயுதங்களின் மறுவடிவம் அல்ல என்றும், இது ‘புதிய ரஷ்யாவின்’ அதிநவீன தயாரிப்பு என்றும் சர்வதேச நாடுகளை மிரட்டும் தொனியில் வர்ணித்திருந்தார். ஆனால், அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் மற்றும் உக்ரைன் நிபுணர்கள், இது ரஷ்யாவின் பழைய ‘RS-26 Rubezh’ கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை திட்டத்தின் (ICBM) அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு சோதனை முறை வடிவமைப்பு தான் என்பதை உறுதி செய்துள்ளனர். மேலும், மேற்கத்திய நாடுகளின் கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு பயந்து, இதில் ஐரோப்பிய அல்லது அமெரிக்க சிப்புகளுக்குப் பதிலாக முற்றிலும் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாட்டுப் பாகங்களே பயன்படுத்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

ரஷ்யா இதுவரை உக்ரைன் போரில் மூன்று முறை இந்த ஒரேஷ்னிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தியுள்ளது. கடந்த 2024 இல் டினிப்ரோவிலும், கடந்த ஜனவரி 2026 இல் எல்விவிலும் மற்றும் அண்மையில் மே 24 அன்று கிய்வ் நகருக்கு அருகிலுள்ள பிலா டெர்க்பா பகுதியிலும் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மாக் 10 (Mach 10) வேகத்தில் வந்து தாக்கும் இந்த ஏவுகணைகளை யாராலும் தடுக்க முடியாது என ரஷ்யா கூறி வந்தாலும், இதன் உண்மையான தொழில்நுட்பத் திறன் மற்றும் நம்பகத்தன்மை மிகக் குறைவு என்றும், ஏவப்படும் நான்கு ஏவுகணைகளில் ஒன்று நடுவழியில் செயலிழந்து விழுந்துவிடுவதாகவும் சர்வதேச ராணுவப் பகுப்பாய்வாளர்கள் தற்போதைய ஆய்வுகளின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளனர்.