திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதியற்ற பலருக்கும், குறிப்பாக வடமாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்குக் கூட மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட்டுப் பெரும் முறைகேடு நடந்துள்ளதாகத் தமிழக நிதி அமைச்சர் மேரி வில்சன் அதிரடிக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடத்தப்பட்ட முதற்கட்ட ஆய்வுகளில் இந்தத் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால் கடந்த ஆட்சியில் மக்கள் வரிப்பணம் முறையற்ற வழிகளில் கைமாறியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதுகுறித்து விரிவாகப் பேசிய நிதி அமைச்சர் மேரி வில்சன், “திமுக ஆட்சியில் தகுதியான ஏழை எளியத் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு இந்த உரிமைத்தொகை முழுமையாகச் சென்றடையவில்லை. ஆனால், வடமாநிலங்களில் இருந்து இங்கு வந்து தங்கியுள்ள பலருக்கு இந்தத் திட்டத்தின் கீழ் பணம் வழங்கப்பட்டுள்ளதாகத் துறை ரீதியான விசாரணையில் எனக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக முழுமையான மற்றும் துல்லியமான அதிகாரப்பூர்வ அறிக்கையைக் கேட்டுள்ளேன். அந்தத் துறை ரீதியான ரிப்போர்ட் கிடைத்தவுடன், முறைகேடுகள் குறித்த அனைத்து உண்மைகளும் மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக உடைக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.
மேலும், மதுரை மாநகராட்சியில் (Madurai Corporation) கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு திட்டப்பணிகளில் மிகப்பெரிய அளவில் ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளதாகத் தவெக அரசுக்குப் புகார்கள் வந்துள்ளன. இது குறித்துப் பேசிய அமைச்சர், “மதுரை கார்ப்பரேஷனில் நடந்த ஊழல்கள் குறித்த முழு விவரங்களையும், அதற்கான ஆதாரங்களையும் நாங்கள் திரட்டி வருகிறோம். தற்போது அந்தத் தரவுகள் அனைத்தையும் அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு (Study) செய்து வருகின்றனர். கூடிய விரைவில் அந்த ஊழல் அறிக்கைகள் அனைத்தும் ஊடகங்கள் வாயிலாகப் பொதுமக்கள் பார்வைக்கு முழுமையாகக் கொண்டு வரப்படும்” என்று உறுதியளித்தார்.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, முந்தைய திமுக அரசின் நிதி மேலாண்மைக் குளறுபடிகளைத் தொடர்ந்து தணிக்கை செய்து வருகிறது. இந்தச் சூழலில், மகளிர் உரிமைத்தொகையில் வெளிமாநிலத்தவர் முறைகேடாகப் பலன் பெற்ற விவகாரமும், மதுரை மாநகராட்சி ஊழல் புகார்களும் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. தகுதியற்றவர்களின் பெயர்களை நீக்கிவிட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்கும் தவெக-வின் புதிய திட்டத்தை முறைப்படுத்தவே இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.