சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்யமூர்த்தி பவனில், தேர்தல் நிதிப் பங்கீடு விவகாரம் தொடர்பாகக் காங்கிரஸ் கட்சியினர் இருதரப்பாகப் பிரிந்து பயங்கர கைக்கலப்பில் ஈடுபட்ட சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், கட்சிக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் மற்றும் தேர்தல் துரோகங்கள் குறித்து விசாரிக்கக் காங்கிரஸ் தலைமை 5 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழுவை அமைத்துள்ளது. இக்குழுவினர் சத்யமூர்த்தி பவனில் மாவட்ட வாரியாகத் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த மோதல் வெடித்துள்ளது.
சனிக்கிழமையன்று (மே 30), வடசென்னை கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவர் திரவியம் மற்றும் தற்போதைய மாவட்டத் தலைவர் மதர்மாகணி ஆகியோர் மீதான புகார்கள் குறித்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவினர் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. அப்போது, சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்காகக் கட்சித் தலைமை வழங்கிய பெரும் தொகையைத் தற்போதைய மாவட்டத் தலைவர் மதர்மாகணி முறையாகக் கட்சியினருக்கும், அடிமட்டத் தொண்டர்களுக்கும் பிரித்து வழங்கவில்லை என்று முன்னாள் மாவட்டத் தலைவர் திரவியத்தின் ஆதரவாளர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதனால் விசாரணை அறையிலேயே இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது.
சுமார் சில மணி நேரங்கள் நீடித்த இந்த விசாரணை முடிவடைந்து, முன்னாள் மற்றும் இந்நாள் மாவட்டத் தலைவர்களின் ஆதரவாளர்கள் சத்யமூர்த்தி பவன் வளாகத்திற்கு வெளியே வந்தனர். அப்போது, ஒருவரை ஒருவர் வசைபாடித் திடீரென மாறி மாறித் தாக்கத் தொடங்கினர். இந்தத் திடீர் வாக்குவாதம் சற்றும் எதிர்பாராத விதமாகக் கைக்கலப்பாக மாறி, இருதரப்பினரும் சத்யமூர்த்தி பவன் வளாகத்திலேயே ஒருவரையொருவர் சட்டைப் பிடித்துக் கொண்டு கடுமையாக மோதிக்கொண்டனர். இந்த மோதலால் கட்சித் தலைமையக வளாகம் முழுவதும் பெரும் ரணகளமாக காட்சியளித்தது.
தலைமையக வளாகத்தில் மூத்த நிர்வாகிகள் முன்னிலையிலேயே மாவட்டத் தலைவர்களின் ஆதரவாளர்கள் குத்துச்சண்டையில் ஈடுபட்டதால், அங்கிருந்த பிற தொண்டர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து அவர்களை விலக்கிவிட்டனர். தேர்தல் தோல்விக்குப் பின் கட்சியைப் பலப்படுத்த நடத்தப்பட்ட உட்கட்சி விசாரணை, பண விவகாரத்தால் அடிதடியில் முடிந்திருப்பது தமிழகக் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒழுங்கு மீறல் மற்றும் பொதுவெளியில் நடந்த கைக்கலப்பு குறித்து மாநிலத் தலைமை அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கைக்குத் தயாராகி வருவதாகத் தெரிகிறது.