சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான (லோக் பவன்) மக்கள் மாளிகையில் நடைபெற்ற திருவள்ளுவர் தின விழாவில், திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை அணிவித்து, திருநீறு பூசி, ருத்ராட்ச மாலை அணிவிக்கப்பட்ட புகைப்படம் பயன்படுத்தப்பட்டது தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்திற்குத் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் அமைச்சரான கே.ஜி. அருண்ராஜ் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவின் மூலம் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
அமைச்சர் அருண்ராஜ் தனது பதிவில், “திருவள்ளுவர் உலகப் பொதுமறை தந்தவர். அவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளோ அல்லது குறிப்பிட்ட அடையாளத்திற்குள்ளோ சுருக்குவது என்பது உலகளாவிய அவரது சிந்தனைகளை சிறுமைப்படுத்துவதற்குச் சமம். லோக்பவனில் (அல்லது எந்தவொரு அரசு/பொது இடங்களிலும்) திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவிப்பது முற்றிலும் தவறான செயலாகும். வள்ளுவரை ஒரு குறிப்பிட்ட வண்ணத்திற்குள் அடைக்க நினைப்பது என்பது கடலை ஒரு குடத்திற்குள் அடைக்க நினைப்பதற்குச் சமம்” என்று சாடியுள்ளார்.
மேலும், திருவள்ளுவர் எந்தவொரு குறிப்பிட்ட மதத்திற்கும், சாதிக்கும், இனத்திற்கும் தன்னைச் சுருக்கிக் கொள்ளவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் கூட அவர் ‘ஆதி பகவன்’, ‘மலர்மிசை ஏகினான்’ என்று பொதுவான சொற்களையே பயன்படுத்தினாரே தவிர, எந்தவொரு குறிப்பிட்ட மதக் கடவுளின் பெயரையும் அவர் குறிப்பிடவில்லை என்றார். அவரே தன்னை ஒரு பொதுவானவராக நிலைநிறுத்தும்போது, அவருக்கு ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடையாளமாகப் பார்க்கப்படும் வண்ணத்தைப் பூசுவது அவரது உலகளாவிய தத்துவத்திற்கு முரணானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வள்ளுவர் நமக்குக் கற்றுக்கொடுத்தது “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற சமத்துவத்தை தான் என்று குறிப்பிட்ட அவர், அவருக்குக் காவி பூசுவதும், அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயல்வதும் எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல என்று எச்சரித்தார். அவரது உடைகளின் நிறத்தை மாற்றுவதை விடுத்து, அவரது குறள் காட்டும் நல்வழியில் நடக்க முயல்வதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை என்றும், தயவுசெய்து வள்ளுவரை யாரும் அரசியல் காரணங்களுக்காகக் கறைபடுத்த வேண்டாம் என்றும் அமைச்சர் அருண்ராஜ் மிக உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.