தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி. ஜோசப் விஜய், அண்மையில் திருச்சியில் நடைபெற்ற தவெகவின் பொதுக்கூட்டத்தில் திமுகவின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஆவேசமாகப் பேசினார். அதில், தவெகவை ‘கவர்ச்சி அரசியல்’ என்று திமுக விமர்சிப்பது குறித்துத் தனக்குக் கடுமையான கோபம் வருவதாகவும், தனது வாயில் நல்ல வார்த்தைகள் வராமல் போய்விடும் என்றும் முதல்வர் விஜய் எச்சரித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், திமுக இளைஞரணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய்யை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துப் பேசியுள்ளார்.
திருச்சியில் முதல்வர் விஜய் பேசிய பேச்சைக் கேட்டு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் இன்று தங்களின் தலையில் அடித்துக் கொள்வதாக உதயநிதி ஸ்டாலின் சாடினார். “கவர்ச்சி அரசியல் இல்லை என்றால், கட்சி ஆரம்பித்து இரண்டே ஆண்டுகளில் வேறு எதை வைத்து நீங்கள் ஆட்சியைப் பிடித்தீர்கள்? கலைஞர் போல இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தி சிறைக்குச் சென்றீர்களா, அல்லது எங்களது தலைவர் மு.க.ஸ்டாலின் போல மிசா கொடுமைகளை அனுபவித்து ஓராண்டு சிறையில் இருந்தீர்களா? மாநில உரிமைகளுக்காகவோ அல்லது ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராகவோ என்னைக்காவது வீதியில் இறங்கிப் போராடி இருக்கிறீர்களா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி, விஜய் தனது பேச்சில் ‘தூர சக்தி, போர சக்தி, பார சக்தி’ எனத் திரைப்பட இயக்குநர் டி. ராஜேந்தர் பாணியில் ரைமிங்காக வசனம் பேசி வருவதாகக் கிண்டலடித்தார். “விஜய் தனது வாயில் கெட்ட வார்த்தை வந்துவிடும் என மிரட்டுகிறார். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் அவரது வாயில் இருந்து ஏதாவது ஒரு நல்ல திட்டமோ அல்லது பயனுள்ள வார்த்தையோ வராதா என்றுதான் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தவெக அரசு பொறுப்பேற்ற இந்த 25 நாட்களிலேயே அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது; திருவள்ளுவருக்கு மீண்டும் காவி பெயிண்ட் அடிக்கப்படுகிறது; கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவோம் என மிரட்டுகிறது; இதையெல்லாம் தட்டிக்கேட்க வக்கில்லாமல் இந்த முதலமைச்சர் பயந்துபோய் ஓரமாய் நின்று வேடிக்கை பார்க்கிறார்” என்று குற்றம் சாட்டினார்.
மேலும், தவெக அரசு அமைந்த 25 நாட்களிலேயே தமிழகத்தில் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட உதயநிதி, சட்டம் ஒழுங்கு சீர்குலைவைச் சுட்டிக்காட்டினால் முதல்வர் விஜய் புலம்புவதாகக் கூறினார். “தேர்தலில் கொடுத்த பொய் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தான் எங்களது தலைவர் உங்களுக்கு 6 மாத காலம் அவகாசம் கொடுத்தார். ஆனால், உங்களால் அதை நிச்சயம் செய்ய முடியாது. 75 ஆண்டுகால பவள விழா பாரம்பரியம் கொண்ட திமுக, எத்தனையோ வெற்றிகளையும் தோல்விகளையும் பார்த்துள்ளது; எதற்கும் பயந்து ஓடும் கூட்டம் திமுக அல்ல. இன்னும் சில நாட்களில் யார் ஓடப்போகிறார்கள் என்பதை மக்கள் பார்ப்பார்கள்” என்று உதயநிதி ஸ்டாலின் அதிரடியாக எச்சரித்துள்ளார்.