அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அனுமதி இல்லாமல் இந்தியாவால் இனி ரஷியா அல்லது ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்தில் கேரளா மற்றும் அசாம் மாநிலங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை ஒரு “சமரசம் செய்யப்பட்ட நபர்” (Compromised Individual) என்று விமர்சித்தார்.
ரஷிய எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா வழங்கிய 30 நாள் தற்காலிக விலக்கு குறித்துப் பேசிய ராகுல், இது இந்தியாவின் கொள்கை முடிவல்ல, மாறாக அமெரிக்காவின் கருணைக்காகக் காத்திருக்கும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டிருப்பதையே காட்டுகிறது என்றார். ஒரு காலத்தில் தனது சொந்த நலன்களுக்காக யாருடைய தயவுமின்றி முடிவெடுத்த இந்தியா, இன்று எண்ணெய் வாங்கக்கூட வாஷிங்டனிடம் அனுமதி கேட்க வேண்டிய சூழலில் இருப்பது வேதனையளிப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த வர்த்தக ஒப்பந்தம் வெறும் எண்ணெய் விவகாரத்தோடு நிற்காமல், இந்திய விவசாயத் துறையையும் அமெரிக்க நிறுவனங்களுக்குத் திறந்து விட்டுள்ளதாகவும் ராகுல் காந்தி எச்சரித்தார். இந்தியாவின் தரவுகள் (Data) அனைத்தும் அமெரிக்கா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ஒட்டுமொத்த தேசத்தின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார சுதந்திரம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
