Posted in

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அரசு: தவெக அரசை கிழித்து தொங்கவிட்ட செந்தில் பாலாஜி!

தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான மின்வெட்டுப் பிரச்சனை அரசியல் களத்தில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ள சூழலில், ஆளும் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசை திமுக மூத்த தலைவரும் முன்னாள் மின்சாரத் துறை அமைச்சருமான வே. செந்தில் பாலாஜி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். தவெக அரசு பொறுப்பேற்ற ஒரே மாதத்திலேயே மக்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையே பரிசாக அளித்துள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், சமூக வலைத்தளங்களில் விளம்பரம் தேடுவதை (PR & Social Media Optics) நிறுத்திவிட்டு, மக்களின் தாகத்தையும் தவிப்பையும் போக்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசி, வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடித்த தவெக அரசு, தனது முதல் மாதத்திலேயே நிர்வாகச் சீர்குலைவை வெளிப்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் சென்னை உட்படப் பல்வேறு மாவட்டங்களில் தினசரி 6 முதல் 12 மணி நேரம் வரை கடுமையான மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் நள்ளிரவில் பொதுமக்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் தூங்க முடியாமல் வீதிகளுக்கு வந்து சாலை மறியலில் ஈடுபடும் அவலம் தொடர்கிறது. தமிழகத்தில் தற்பொழுது இரவில் சாலை மறியல் இல்லாத ஊரே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது” என்று சாடியுள்ளார்.

மேலும், தவெக அரசின் மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் இந்த மின்வெட்டுப் பிரச்சனைக்குத் தீர்வு காணாமல், தினமும் ஒரு சதித்திட்டக் கதையைக் (Conspiracy Theories) கூறி மக்களைத் திசைதிருப்ப முயல்வதாகச் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். “மின்வாரிய அலுவலகங்களில் ஹார்டு டிஸ்க் காணாமல் போய்விட்டது, பகல் நேரத்தில் யாரோ ஃபியூஸ் கேரியர்களைத் திருடிச் சென்றுவிட்டார்கள், அரசு ஊழியர்கள் எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமாகச் சதி செய்கிறார்கள் என்றெல்லாம் அமைச்சர் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களைப் பகிர்ந்து வருகிறார். பகலில் நடக்கும் திருட்டால் இரவில் எப்படி மின்வெட்டு ஏற்படும் என்ற சாமானியனின் கேள்விக்கு அமைச்சரிடம் பதில் இல்லை. தன் திறமையின்மையை மறைக்க அரசு ஊழியர்கள் மீது பழி போடுவதா?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் பிரச்சார மேடைகளில் பஞ்ச் வசனங்கள் பேசிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், தற்போது மின்வெட்டால் மக்கள் தவிக்கும் போது வாய்மூடி மௌனியாக இருப்பதாகச் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார். “ஆண்டுதோறும் மின்சாரத் தேவை அதிகரிப்பது இயல்பு, அதைத் திட்டமிட்டுத் திறம்படக் கையாள்வதே உண்மையான ஆளுமை. மு.க.ஸ்டாலின் தலைமையிலான முந்தைய ‘திராவிட மாடல்’ ஆட்சியில், மின் தேவை வரலாறு காணாத அளவு உயர்ந்தபோதும் ஒருமுறை கூடப் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது. தவெக அரசு ‘ரீல்ஸ்’ மூலமாக ஆட்சிக்கு வந்துவிட்டு, ‘ரியல்’ நிர்வாகத்தில் கோட்டை விட்டுவிட்டது” என்று அவர் காரசாரமாகத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.