Posted in

விமானத்திற்குள்ளேயே கைதான சிஜேபி தலைவர் அபிஜித் டிப்கே: ‘இந்திரா காந்தி கூட இதைச் செய்யவில்லை’ எனக் குற்றச்சாட்டு

தலைநகர் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், மும்பையிலிருந்து விமானம் மூலம் டெல்லி வந்தடைந்த சிஜேபி கட்சியின் நிறுவனத் தலைவர் அபிஜித் டிப்கே, செய்தித் தொடர்பாளர்கள் சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோரை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.

விமானம் தரைையிறங்கிய உடனே விமானத்தின் உட்பகுதிக்கே நேரில் வந்த டெல்லி காவல்துறையினர், அவர்கள் மூவரையும் காவலில் எடுத்தனர். இந்தச் சம்பவத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாகப் பதிவிட்ட அபிஜித் டிப்கே, “அவசரநிலைக் காலத்தில் கூட இந்திரா காந்தி இப்படிச் செய்தது இல்லை. நாங்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தவே வந்தோம், ஆனால் எங்களை குற்றவாளிகளைப் போல விமானத்தில் இருந்தே கைது செய்கிறார்கள்” என்று குற்றம்சாட்டினார்.

காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்குப் பல்வேறு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஜனநாயக வழியில் போராட்டம் நடத்த முயன்ற தலைவர்களை விமானத்திற்குள் நுழைந்து கைது செய்தது சர்வாதிகாரத்தின் உச்சம் என அவர்கள் விமர்சித்துள்ளனர்.

தற்போது கைது செய்யப்பட்ட சிஜேபி தலைவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் டெல்லி நகரின் முக்கியப் பகுதிகளிலும் விமான நிலையப் பகுதிகளிலும் கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுத் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.