Posted in

மகள் ஐஸ்வர்யா குறித்த அவதூறுகளுக்கு நடிகர் அர்ஜுன் கண்டனம்

தனது மூத்த மகள் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுனின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குணம் குறித்துப் பரப்பப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு நடிகர் அர்ஜுன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நவம்பர் 19-ஆம் தேதி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையான புகார் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இளைய மகள் அஞ்சனாவின் திருமணத்தில் ஐஸ்வர்யாவின் கணவர் உமாபதி மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்துகொள்ளாததைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பல்வேறு யூகங்களும் விவாதங்களும் எழுந்தன. அதன் தொடர்ச்சியாக, ஐஸ்வர்யாவை மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர் என முத்திரை குத்தும் வகையில் தவறான கருத்துகள் முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளதாகவும், எந்தவித ஆதாரமும் இன்றி ஒரு பெண்ணின் கண்ணியத்தைக் கேள்விக்குள்ளாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அர்ஜுன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். உண்மை மற்றும் நம்பகத்தன்மையைக் கருத்தில் கொள்ளாமல் சில ஊடகப் பிரிவுகள் ஆதாரமற்ற செய்திகளைப் பரப்புவது வருத்தமளிப்பதாகவும், தமது அமைதியை பலவீனமாகக் கருதக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவதூறான கருத்துகள் தொடர்ந்து பரப்பப்பட்டாலோ பெரிதாக்கப்பட்டாலோ உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நடிகர் அர்ஜுன் எச்சரித்துள்ளார். மகள் விரும்பினால் சரியான நேரத்தில் அவரே தனது தரப்பு விளக்கத்தைத் தெரிவிப்பார் என்றும், சுயமரியாதையுடன் வாழும் அவரது உரிமைக்குத் தான் எப்போதும் துணையாக நிற்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.