தமிழகத்தில் தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஒரு மாத காலம் நிறைவடைந்துள்ள நிலையில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான அரசியல் வார்த்தைப்போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அண்மையில் தவெகவின் தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், அதிமுகவை மிகக் குறைந்த அளவில் ‘அண்டர் எஸ்டிமேட்’ (Underestimate) செய்து பேசியதாகக் கூறி, அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன், “நடிகர் விஜய் நாவடக்கத்தோடு பேச வேண்டும்” என்று மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன், “அதிமுக என்பது இரத்தமும் சதையும் தியாகமும் சிந்தி வளர்க்கப்பட்ட தமிழகத்தின் மிகப்பெரிய மக்கள் இயக்கம்; ஒரு நடிகர் நாடாளலாம் என்பதற்கும், குறுகிய காலத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பதற்கும் எம்ஜிஆர் காட்டிய சரித்திர வரலாறே இந்த இயக்கம்தான்” என்று பெருமிதம் தெரிவித்தார். மேலும், “இந்தக் கட்சி தொடங்கிய நேரத்தில் பிறக்கவே செய்யாத நடிகர் விஜய், ஏதோ தற்போதைய தேர்தல் சூழலில் திமுகவில் இருந்து பிரிந்த சில எம்.எல்.ஏ-க்களின் மறைமுக ஆதரவோடு ஒரு மைனாரிட்டி ஆட்சியை அமைத்துவிட்டு, அண்ணா திமுகவை எள்ளி நகையாடுவதை ஒட்டுமொத்த தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று கொதிப்படைந்தார்.
தவெக அரசின் ஒரு மாத கால தோல்விகளை அடுக்கிக் காட்டிய அவர், “வாக்களித்த மக்களுக்கு இந்த ஒரு மாதத்தில் என்ன செய்தோம் என்று சொல்லாமல், தேவையில்லாத வார்த்தைகளைப் பேசி வருகிறார். தமிழகத்தில் தற்போது பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது; முதல்வர் அறிவித்த ‘சிங்கப்பெண் படை’ இன்னமும் அமைக்கப்படவில்லை, மாறாக பெண் போலீசாருக்கே காவல்துறையில் அவமானம் நேரிடுகிறது” என்று குற்றம் சாட்டினார். மேலும், திருநெல்வேலி மற்றும் திருவண்ணாமலையில் இளம்பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு மிரட்டப்பட்ட சம்பவங்களையும், தூத்துக்குடியில் தவெக நிர்வாகி ஒருவர் பெண்ணை ஏமாற்றிப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதையும் சுட்டிக்காட்டி, சட்டம் ஒழுங்கை கவனிப்பதை விட்டுவிட்டு அதிமுகவை அழிக்க நினைப்பதாக விஜய் பகல் கனவு காண வேண்டாம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தவெக தேர்தல் காலத்தில் கொடுத்த தாய்மாமன் சீர், மகளிருக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் வழங்கும் திட்டம், இலவச ஏசி பேருந்து பயணம் மற்றும் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி போன்ற நூற்றுக்கணக்கான வாக்குறுதிகள் என்னவாயின என்று கேள்வி எழுப்பினார். “நாங்கள் கடந்த காலத்தில் தோல்விகளைச் சந்தித்திருக்கிறோம், ஆனால் முற்றிலும் மக்களால் நிராகரிக்கப்படவில்லை; 1996-ல் 4 இடங்களை மட்டுமே பெற்ற நாங்கள், இரண்டே ஆண்டுகளில் 1998-ல் வாஜ்பாயைப் பிரதமராக்கும் அளவிற்கு எழுச்சி பெற்று, 2001-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தோம்; எனவே, அதிமுகவை விமர்சிப்பதை நிறுத்திவிட்டு, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தி உள்ளாட்சித் தேர்தலை நடத்த விஜய் அரசு உடனடியாக முயற்சிக்க வேண்டும்” என்று பொள்ளாச்சி ஜெயராமன் வலியுறுத்தினார்.