அமெரிக்காவின் மேஸ் ஜெனரல் பிரிகாம் (Mass General Brigham) மருத்துவ மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 4 கோடிக்கும் அதிகமான முகப் புகைப்படங்களைப் பயன்படுத்தி ‘ஃபேர்-ஃபேஸ்’ (FAHR-Face) என்ற புதிய செயற்கை நுண்ணறிவு மாதிரியை உருவாக்கியுள்ளனர். தி லான்செட் டிஜிட்டல் ஹெல்த் (The Lancet Digital Health) இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வின்படி, புகைப்படத்தின் மூலம் ஒருவரின் உயிரியல் வயதைக் கணிக்கும் ‘ஃபேர்-ஃபேஸ் ஏஜ்’ மற்றும் புற்றுநோயாளிகளின் வாழ்நாளைக் கணிக்கும் ‘ஃபேர்-ஃபேஸ் சர்வைவல்’ ஆகிய இரு கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
சோதனை ஓட்டத்தில் அதிக ஆபத்து உள்ளவர்களாக இந்த ஏஐ மாதிரி அடையாளப்படுத்திய புற்றுநோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் 90 நாட்களுக்குள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மனிதக் கண்களால் எளிதில் கண்டறிய முடியாத நுட்பமான முக மாற்றங்களை ஆராய்ந்து இக் கருவி துல்லியமாகக் கணிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். எனினும், இது இன்னும் ஆரம்பக்கட்ட பரிசோதனை நிலையில் மட்டுமே உள்ளதால், மருத்துவமனைகளில் நேரடியாகப் பயன்பாட்டிற்கு வர கூடுதல் ஆய்வுகள் தேவை என மருத்துவ வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசு மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் இத்தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளதால், உரிய சட்ட வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களிடம் இக்கருவியின் துல்லியத்தன்மையை உறுதிசெய்ய மருத்துவ ஆய்வாளர்கள் தொடர்ந்து தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.