Posted in

நிழல் போல நானும் நடை போட நீயும் – மனைவி தயாரிப்பில் களமிறங்கும் அஜித்: ‘AK 64’ அதிரடி டைட்டில் அவுட்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித்குமார், தனது திரைப்பயணத்தில் 34 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், ரசிகர்களுக்கு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியாகத் தனது 64-வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ‘AK 64’ என அழைக்கப்பட்டு வந்த இத்திரைப்படத்திற்கு ‘டேர்டெவில்’ (Daredevil) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தின் மிகமுக்கியமான சிறப்பம்சமாக, அஜித்தின் மனைவி ஷாலினி அஜித்குமார் முதன்முறையாகத் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.

திரைத்துறையில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள ஷாலினி அஜித்குமார், ‘பிரேவ்ஹார்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ்’ (Bravehearts Production) என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, அதன் மூலம் இப்படத்தைத் தயாரிக்கிறார். நிஜ வாழ்க்கையில் அஜித்தின் அனைத்து வெற்றிகளுக்கும் பக்கபலமாகவும் நிழல் போல உடனிருந்தும் வரும் ஷாலினி, தற்போது திரைப்பயணத்திலும் தயாரிப்பாளராக இணைந்துள்ள சம்பவம் ‘அமர்க்களம்’ படக்காலத்து அழகான நினைவுகளை அஜித் ரசிகர்களிடையே மீண்டும் புதுப்பித்துள்ளது.

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் அஜித்துடன் இந்தக் கூட்டணியில் கைகோர்த்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கவுள்ளார். 34 ஆண்டு கால திரைப்பயணத்தில் அஜித்தின் ஆர்வத்தையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் வகையில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இந்தத் தலைப்பு மற்றும் போஸ்டர் அறிவிப்பைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து தயாரிப்பாளர் ஷாலினிக்கும், அஜித்துக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

குடும்பத் தயாரிப்பாகவும், பிரம்மாண்ட படைப்பாகவும் உருவாகவுள்ள இந்த ‘டேர்டெவில்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனைகளைப் படைக்கும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் கொண்டாடி வருகின்றனர். கார் பந்தயங்களில் தீவிர கவனம் செலுத்தி வந்த அஜித், சொந்த தயாரிப்பு நிறுவன அறிவிப்புடன் திரைப்படத்திலும் மாஸ் என்ட்ரி கொடுத்திருப்பது கோலிவுட் திரையுலகில் புதிய உற்சாக அலைகளை ஏற்படுத்தியுள்ளது.