பொள்ளாச்சியில் நடைபெற்ற ‘வீ த லீடர்ஸ்’ (We The Leaders) மாநாட்டில், போதைப்பொருள் ஒழிப்பு முழக்கங்களைத் தாண்டி, தமிழகத்தின் எதிர்கால அரசியல் மாற்றத்திற்கான மிக முக்கிய புள்ளிவிவரங்களை வெளியிட்டு அதிரடி கிளப்பியுள்ளார் இந்த இயக்கத்தின் நிறுவனர் கே. அண்ணாமலை. ஜூலை 12-ஆம் தேதி பொள்ளாச்சியில் கூடிய இந்த மக்கள் கூட்டம் எந்தவொரு விஐபி அழைப்பும் இன்றித் தாங்களாகவே முன்வந்து திரண்டது ஒரு புதிய சரித்திரம் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்ட அவர், வரும் 26-ஆம் தேதி திருச்செந்தூரில் நடைபெறவிருக்கும் மாநாடும் இதேபோன்றதொரு மாபெரும் தன்னெழுச்சியைச் சந்திக்கும் என்று சவால் விடுத்தார். நேர்மையானவர்கள் சமுதாயப் பணி செய்ய வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த மேடை உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
தங்கள் அமைப்பில் இணைந்துள்ள 19 லட்சம் உறுப்பினர்களின் துல்லியமான தரவுகளை (Data) மேடையில் அடுக்கிக் காட்டிய அண்ணாமலை, பெண்களின் பங்களிப்பு குறித்து மிக முக்கிய செய்தியைப் பகிர்ந்து கொண்டார். பொதுவாக அரசியல் மற்றும் பொது அமைப்புகளில் பெண்களின் எண்ணிக்கை வெறும் 1 முதல் 5 விழுக்காடு மட்டுமே இருக்கும் சூழலில், ‘வீ த லீடர்ஸ்’ ஆரம்பிக்கப்பட்ட ஒரே மாதத்தில் 17% பெண்கள் தங்களை நம்பி இணைந்துள்ளது தங்களின் முதல் வெற்றி என்றார். வரும் காலங்களில் இந்த எண்ணிக்கையை 33%, 40% மற்றும் 50% என அடுத்தடுத்த கட்டங்களுக்குக் கொண்டு சென்று, பெண்களை ஒரு பெரும் சமுதாய சக்தியாக மாற்றுவதே தங்களின் முக்கிய கடமை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டில் ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் உற்றுநோக்க வைத்தது அண்ணாமலை ‘ஜென்சி’ (Gen Z) எனப்படும் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைய தலைமுறையினர் குறித்துப் பேசியதுதான். “ஜென்சி இளைஞர்களைப் பேசவே முடியாது, அவர்கள் எப்படி வேண்டுமானாலும் போவார்கள் என்று சமுதாயம் நினைக்கிறது; ஆனால் இந்த மாநாட்டின் மேடையில் இருந்தவர்கள் முதல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர்கள் வரை அனைவரும் ஜென்சி தலைமுறையினர்தான்” என்று பெருமிதப்பட்டார். தங்களின் 19 லட்சம் பேரில் 14 விழுக்காட்டினர் 18-25 வயதுடையவர்கள் என்றும், 26 முதல் 39 வயது வரை உள்ளவர்கள் 40 விழுக்காட்டினர் என்றும் குறிப்பிட்ட அவர், ஒட்டுமொத்தமாக 39 வயதிற்குக் கீழ் உள்ளவர்கள் மட்டுமே தங்களின் அமைப்பில் 54% என்ற பிரம்மாண்ட பலத்துடன் இருக்கிறார்கள் என்று லிஸ்ட் போட்டு உடைத்தார்.
மாற்றத்தை உடனடியாக எதிர்பார்க்கும் இந்த 54% இளைஞர்களின் வித்தியாசமான எண்ணோட்டமும், அவர்களின் குரலும் கேட்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அண்ணாமலை, 2031-க்கான தனது அரசியல் இலக்கை மிகத் தெளிவாகப் பிரகடனப்படுத்தினார். கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த இளைய தலைமுறை தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியதைப் போல, வரும் 2031-ஆம் ஆண்டில் மற்றுமொரு மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்சி மாற்றத்தை இந்த ஜென்சி இளைஞர்கள் நிச்சயம் ஏற்படுத்துவார்கள் என்று அண்ணாமலை திட்டவட்டமாகக் கூறினார். குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பட்டிதொட்டியெங்கும் உள்ள படித்த, பண்பான, சமுதாயத்திற்காக அர்ப்பணித்த புதிய தலைவர்களை உருவாக்குவதே அடுத்த 5 ஆண்டுகாலத் திட்டம் என்றும், கம்பீரமாக நடைபோடும் இந்த அமைப்பின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் போதைக்கு எதிரான விழிப்புணர்வுப் பணிகளைத் தொடர்ச்சியாகக் களத்தில் நின்று முன்னெடுப்போம் என்றும் கூறி தனது பேச்சை நிறைவு செய்தார்.