தாய்லாந்தின் பாங்காக் நகரில் உள்ள பங்சாக் (Bangchak) எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் சேமிப்பு நிலையத்தில் வியாழக்கிழமை (நவம்பர் 26, 2026) பிற்பகல் வெடிப்பு மற்றும் தீ விபத்து ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அருகிலுள்ள பள்ளி மாணவர்களை உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
கிழக்கு பாங்காக்கின் ஃப்ரா கனோங் (Phra Khanong) பகுதியில் உள்ள சுகும்விட் 62 (Sukhumvit 62) வளாகத்தில் பிற்பகல் 2.51 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தினசரி 1,20,000 பேரல்கள் திறன் கொண்ட இந்த ஆலை தாய்லாந்தின் ஐந்தாவது பெரிய சுத்திகரிப்பு நிலையமாகும்; மேலும், நகர்ப்புறத்தில் அமைந்துள்ள ஒரே ஆலையாகவும் இது உள்ளது. வெடிப்புக்குப் பிறகு அடர்ந்த கரும்புகை வானில் உயரமாக எழுந்ததுடன், பல கிலோமீட்டர் தொலைவுக்குக் கட்டிடக் கதவுகள் அதிர்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எராவன் அவசர மருத்துவ மையத்தின் தகவல்படி, இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர்; அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பேங் நா (Bang Na) மாவட்ட அலுவலகம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், “பங்சாக் எண்ணெய் கிடங்கில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது; தங்களது பாதுகாப்பிற்காக அருகிலுள்ள பொதுமக்கள் அப்பகுதியை உடனடியாக விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளது. அருகிலுள்ள கட்டிடங்களில் பணியாற்றிய ஊழியர்கள் வெடிப்பின் அதிர்வை உணர்ந்ததாகச் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
வெடிப்பைத் தொடர்ந்து ஃப்ரா கனோங் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன; மேலும், ஆலையின் அனைத்து உற்பத்திப் பிரிவுகளையும் பங்சாக் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. அவசர வாகனங்கள் தடையின்றிச் செல்ல பழைய ரயில் பாதை ஓரமுள்ள சாலையைத் தவிர்க்குமாறு வாகன ஓட்டிகள் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.