வங்கக்கடலில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சிகள் காரணமாகத் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நவம்பர் 13-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் (நவம்பர் 14) மேலும் தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தற்போது மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல்-லட்சத்தீவு பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சிகள் நிலவி வருகின்றன. இதன் காரணமாக தமிழகத்தின் சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் நவம்பர் 13-ஆம் தேதிக்குள் பாதுகாப்பாகக் கரை திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
புதிய வானிலை மாற்றத்தைக் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வாளர்கள், மழைப்பொழிவு அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய பின் அதன் நகர்வு மற்றும் வீரியம் குறித்த துல்லியமான விவரங்களை வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து வெளியிடவுள்ளது.