Posted in

கனடா பிராம்ப்டனில் ஈழத் தமிழர் நினைவு தூபியை சிதைத்த 14 வயது சிறுவன் சிக்கினான் !

📅 வெளியானது: April 13, 2026

கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள சின்குவாக்குசி பூங்காவில் (Chinguacousy Park) மிகப்பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபி, மார்ச் மாத இறுதியில் மர்ம நபர்களால் சமூக விரோத வாசகங்கள் அடங்கிய ஸ்ப்ரே பெயிண்டால் சிதைக்கப்பட்டது. கடந்த 2025-ம் ஆண்டு மே மாதம் திறக்கப்பட்ட இந்தத் தூபி, மிகக்குறுகிய காலத்திலேயே மூன்றாவது முறையாகத் தாக்குதலுக்கு உள்ளானது கனடா வாழ் தமிழ் மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும், மனவேதனையையும் ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாக கையில் எடுத்த பீல் பிராந்திய காவல்துறையின் (Peel Regional Police) ‘வெறுப்புணர்வு குற்றத் தடுப்புப் பிரிவு’ (Hate Crime Unit), சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயங்களை வைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தியது. இந்த அதிரடி விசாரணையின் முடிவில், பிராம்ப்டனைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளான். அந்தச் சிறுவன் மீது 5,000 டாலருக்கும் அதிகமான பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியதாக இரண்டு முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள காவல்துறைத் தலைவர் நிஷான் துரையப்பா, “பொதுமக்களின் உணர்வுகளுடன் தொடர்புடைய இது போன்ற இடங்களைச் சிதைப்பதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது; வெறுப்புணர்வுத் தாக்குதல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார். கைது செய்யப்பட்டவர் சிறுவன் என்பதால் சட்டப்படி அவரது பெயர் மற்றும் விவரங்கள் வெளியிடப்படவில்லை. விரைவில் அவர் ஒன்டாரியோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

இலங்கையில் நிகழ்ந்த தமிழ் இனப்படுகொலையை உலகிற்கு நினைவூட்டும் இந்தச் சின்னம், தொடர்ந்து சிதைக்கப்பட்டு வருவது ஒரு திட்டமிட்ட சதி எனத் தமிழ் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, நினைவுத் தூபி அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தவும், கூடுதல் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தவும் பிராம்ப்டன் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.