டீனேஜ் வயதினருக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சாட்ஜிபிடி (ChatGPT for Teens) பதிப்பு முறையான பாதுகாப்பு நெறிமுறைகளைக் கொண்டிருக்கவில்லை என்று காமன் சென்ஸ் மீடியா என்ற நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. இளைய தலைமுறையினரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஓபன் ஏஐ நிறுவனம் அறிமுகப்படுத்திய இந்தச் செயலி, சோதனையின் போது பல்வேறு குறைபாடுகளைக் கொண்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பதினெட்டு வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இதைப் பயன்படுத்துவது ஆபத்தானது என அந்த அமைப்பு தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஆய்வின் போது ஆயிரக்கணக்கான சோதனைக் கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும், அப்போது உரிய பாதுகாப்புத் தடைகள் சரியாகச் செயல்படவில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாகத் தற்கொலை எண்ணங்கள் மற்றும் மனநலப் பிரச்சினைகள் தொடர்பான சோதனைகளில் முறையான எச்சரிக்கைகள் அல்லது வழிகாட்டுதல்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் இளம் வயதுடைய பயனர்கள் ஆபத்தான தகவல்களை எளிதில் அணுகும் நிலை உள்ளதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த அறிக்கை தொழில்நுட்ப வட்டாரத்திலும் பெற்றோர் மத்தியிலும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நிறுவனங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.
பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக உறுதி செய்யப்படும் வரை பதினெட்ட வயதுக்குட்பட்ட சிறுவர்களை இதுபோன்ற செயற்கை நுண்ணறிவுச் செயலிகளைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது எனத் தொடர்புடைய அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன.