சென்னைக்கு அருகேயுள்ள கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) பகுதியில் அமைந்துள்ள முட்டுக்காடு கிராமத்தில், கடந்த சில நாட்களாகக் கடுமையான மற்றும் தொடர் மின்வெட்டுப் பிரச்சினை நிலவி வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், நள்ளிரவில் திடீரென வீதிகளில் இறங்கி மாபெரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நான்காவது முறையாக மக்கள் இந்தச் போராட்டத்தில் குதித்ததால், கிழக்கு கடற்கரைச் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.
இந்தத் திடீர் போராட்டக் களத்திற்குப் பொதுமக்களிடம் சமரசம் பேசவும், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரவும் திருப்போரூர் தொகுதி தவெக (TVK) சட்டமன்ற உறுப்பினர் விஜயராஜ் நேரில் வருகை தந்தார். ஆனால், அவர் வந்தவுடன் அங்கு திரண்டிருந்த பெண்கள் மற்றும் கிராம மக்கள், எம்எல்ஏ விஜயராஜை நாலாபுறமும் முற்றுகையிட்டு ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் நள்ளிரவில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் எம்எல்ஏ-வை நோக்கி, “நாங்கள் இரவில் தூங்க முடியாமல், கொசுக்கடியிலும் வெயிலிலும் தவித்து வருகிறோம்; பிறந்த குழந்தைகளும், கர்ப்பிணிப் பெண்களும் தூக்கமில்லாமல் அவதிப்படுகின்றனர். ஓட்டுப் போட்டு உங்களை ஜெயிக்க வைத்ததற்கு எங்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா? எங்களை மனிதர்களாகக் கூட நீங்கள் மதிக்கவில்லையா?” என்று கண்ணீர் மல்கக் கேள்வி எழுப்பினர். மேலும், மின்தடை குறித்து மின்வாரிய அலுவலகத்திற்குத் தொடர்பு கொண்டால் அதிகாரிகள் யாரும் போனை எடுப்பதில்லை என்றும் குற்றம் சாட்டினர்.
ஊர் திருவிழா நடக்கும் நேரத்தில் கூட மின்சாரத்தை நிறுத்தி விடுவதாகவும், கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ந்து சில மணி நேரங்கள் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுவதாகவும் மக்கள் தங்களது குமுறல்களை வெளிப்படுத்தினர். சமரசம் பேச வந்த தவெக எம்எல்ஏ-வை மக்கள் முற்றுகையிட்டுத் துளைத்தெடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, தமிழக அரசியல் வட்டாரத்திலும், நகர்ப்புற உள்கட்டமைப்பு நிர்வாக ரீதியிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.