Posted in

பெரம்பூர் மக்களுக்கு பம்பர் கிஃப்ட்! முன்மாதிரி தொகுதியாக மாற்ற 2.0 வளர்ச்சி திட்டத்தை கையில் எடுத்த சென்னை மாநகராட்சி!

சென்னை மாநகராட்சியின் மிக முக்கியப் பகுதிகளுள் ஒன்றான பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியை (Perambur Constituency) உலகத்தரம் வாய்ந்த ஒரு முன்மாதிரி தொகுதியாக (Model Constituency) மாற்றுவதற்கான மாபெரும் ‘2.0 வளர்ச்சி திட்டத்தை’ சென்னை மாநகராட்சி தற்பொழுது தீவிரமாகத் கையில் எடுத்துள்ளது. இந்த மெகா திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப., அவர்கள் பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேரில் சென்று அதிடடி கள ஆய்வுகளை மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இப்புதிய 2.0 உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வட சென்னை மக்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பன்னோக்கு அதிநவீன மருத்துவமனைகள், புதிய பள்ளிக் கட்டிடங்கள், உயர்தர விளையாட்டு வளாகங்கள் மற்றும் நவீன உணவு வளாகங்கள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. குறிப்பாகத் தண்டையார்பேட்டை மண்டலம், சத்தியமூர்த்தி நகரில் தற்பொழுது செயல்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மைய வளாகத்தில், ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் சுமார் ரூ.86.70 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாகக் கட்டப்பட்டு வரும் அதிநவீன மருத்துவமனைக் கட்டிடப் பணிகளை ஆணையர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுமட்டுமன்றி, இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில், சர்மா நகர் மற்றும் எம்.கே.பி நகர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் புதிய உள்விளையாட்டு வளாகமும், மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 1120 சதுர மீட்டர் பரப்பளவில் அதிநவீன சிறுவர் சறுக்கு விளையாட்டு மைதானமும் (Skating Rink) தற்பொழுது அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், வியாசர்பாடி பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்காகப் புதிதாக அதிநவீன இரத்த சுத்திகரிப்பு நிலையம் (Dialysis Centre) அமைப்பது குறித்தும், அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள குளங்களைச் சீரமைப்பது குறித்தும் விரிவான திட்ட அறிக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓட்டேரி நல்லா கால்வாய் பகுதியில் ரூ.65 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் மற்றும் கணேசபுரத்தில் ரூ.226.55 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலப் பணிகளையும் விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. பெரம்பூர் தொகுதியின் ஒட்டுமொத்த முகவரியையே மாற்றியமைக்கக் கூடிய இந்த அடுத்தகட்ட உள்கட்டமைப்பு பாய்ச்சல், சென்னை மாநகராட்சியின் மிகச் சிறந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களில் ஒன்றாக இருக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *