Posted in

சென்னையில் காவல் துறை அதிரடிச் சோதனை: 185 ரௌடிகள் உள்பட 222 பேர் கைது!

தலைநகர் சென்னையில் குற்றச் சம்பவங்களைக் முழுமையாகத் தடுக்கும் நோக்கத்துடனும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் சென்னை பெருநகரக் காவல் துறை சார்பில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் முனைவர் A. அமல்ராஜ் உத்தரவின்பேரில் நகரின் அனைத்துக் காவல் மாவட்டங்களிலும் நேற்று (நவம்பர் 9) தீவிரத் தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது. அனைத்து காவல் மாவட்டங்களிலும் துணை ஆணையர்களின் நேரடிக் கண்காணிப்பில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் இந்தச் சோதனையை நடத்தினர்.

இந்தத் திடீர் சோதனையின் போது சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உள்ளிட்ட 222 நபர்கள் பிடிபட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பிடிபட்டவர்களில் 185 ரௌடிகள் அடங்குவர் என்பதும், தீவிரக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 36 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும் பிடிவாரண்ட் நிலுவையில் இருந்த குற்றவாளிகள் மற்றும் பிணையில் வெளிவந்து தலைமறைவாக இருந்த நபர்கள் குறித்தும் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் பொதுமக்களின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை தொடரும் எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றச் செயல்களை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் நகர் முழுவதும் சோதனை நடவடிக்கைகளும் ரோந்துப் பணிகளும் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கைது செய்யப்பட்ட நபர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சென்னை பெருநகர் முழுவதும் காவல் துறையின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.