Posted in

விண்வெளியில் ஓராண்டு சாதனைத் திட்டம்: 2030 நிலவுப் பயணத்திற்கு சீனா விஸ்வரூபத் தயாரிப்பு!

சீன விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், தங்களின் விண்வெளி ஆய்வு வரலாற்றிலேயே மிக நீண்ட காலத் திட்டமாக, விண்வெளி வீரர் ஒருவரை தங்களின் ‘தியாங்கோங்’ (Tiangong) விண்வெளி நிலையத்திற்கு ஓராண்டு காலப் பயணமாக அனுப்பியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு 11:08 மணிக்கு வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் (Jiuquan) செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து, ‘லாங் மார்ச்-2எஃப்’ (Long March-2F) ராக்கெட் மூலமாக ‘ஷென்சோ-23’ (Shenzhou-23) விண்கலம் மூன்று விண்வெளி வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 2030 ஆம் ஆண்டிற்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் சீனாவின் மெகா திட்டத்திற்கு இந்த ஓராண்டு கால விண்வெளிப் பயணம் ஒரு முக்கிய அடித்தளமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த ‘ஷென்சோ-23’ விண்வெளிப் பயணக் குழுவிற்கு கமாண்டர் ஜு யாங்ஜு (Zhu Yangzhu) தலைமை தாங்குகிறார். இவருடன் விண்வெளி பைலட் ஜாங் ஜியுவான் (Zhang Zhiyuan) மற்றும் ஹாங்காங் வரலாற்றிலேயே முதல்முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பெண் விண்வெளி வீரரான லாய் கா-யிங் (Lai Ka-ying / Li Jiaying) ஆகிய மூவர் பயணித்துள்ளனர். இவர்களில் ஒருவர் விண்வெளி நிலையத்தில் தொடர்ந்து ஓராண்டு தங்கி, ஈர்ப்பு விசை இல்லாத சூழலில் மனித உடலின் எலும்பு அடர்த்தி குறைவு, தசை இழப்பு, கதிர்வீச்சு பாதிப்புகள் மற்றும் மன அழுத்த எல்லைகளை ஆராயவுள்ளார். அந்த வீரர் யார் என்பது பயணத்தின் முன்னேற்றத்தைப் பொறுத்து பின்னர் அறிவிக்கப்படும்.

அமெரிக்காவின் நாசா (NASA) அமைப்பு 2028 ஆம் ஆண்டிற்குள் விண்வெளி வீரர்களை மீண்டும் நிலவில் இறக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், சீனா தனது 2030 காலக்கெடுவிற்குள் நிலவில் மனிதர்களைத் தடம் பதிக்க வைப்பதற்கான தீவிர விண்வெளிப் போட்டியில் இறங்கியுள்ளது. கடந்த 2021 முதல் சீனா தனது வீரர்களை ஆறு மாத கால சுழற்சி முறையில் விண்வெளிக்கு அனுப்பி வந்த நிலையில், தற்போது அதை ஓராண்டாக உயர்த்தியுள்ளது. நிலவு மற்றும் செவ்வாய் கிரகப் பயணங்களுக்கு நீண்ட நாட்கள் விண்வெளியில் தங்குவது கட்டாயம் என்பதால், மனித உடலியல் மாற்றங்களை முன்கூட்டியே கண்டறிய இந்த நீண்ட காலப் பயணம் பெரிதும் உதவும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

விண்வெளியில் மனிதச் செயற்கைக் கருமுட்டை (Artificial Embryo) சோதனைகளைத் தொடங்கியுள்ள சீனா, விண்வெளிப் பயணத்தில் தங்களின் அதிநவீன தொழில்நுட்பங்களை நிரூபித்து வருகிறது. இந்த ஷென்சோ-23 விண்கலம், விண்வெளி நிலையத்தின் மையத் தொகுதியுடன் அதிவேகமாகத் தானியங்கி முறையில் இணையும் புதிய தொழில்நுட்பத்தை இம்முறை சோதிக்கிறது. 2030-ல் நிலவுக்குச் செல்லும் விண்கலமும், லேண்டரும் நிலவு வட்டப்பாதையில் இப்படித்தான் தானியங்கி முறையில் இணைய வேண்டும் என்பதால், இந்தச் சோதனை சீனாவின் விண்வெளிப் பேராசையை நனவாக்குவதில் மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.