சீனாவின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பேரிடர் உருவக மையங்களில் (Disaster Simulation Centres), புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற ஆபத்தான சூழ்நிலைகளைத் தற்காப்புடன் அனுபவிக்கும் சுற்றுலா முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஹங்ஜோ போன்ற நகரங்களில் உள்ள இந்த மையங்களில் புயல் காற்று மற்றும் திடீர் வெள்ளம் போன்றவற்றைத் தாங்கும் பயிற்சிகளைப் பெறுவதற்காகப் பலரும் பணம் செலுத்தி வந்து கொண்டிருக்கின்றனர். ஆபத்தான சூழல்களைப் பாதுகாப்பான முறையில் எதிர்கொள்வதோடு, அவசர காலங்களில் எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பதைக் கற்றுக்கொள்வதே இதன் முக்கிய நோக்கமாக உள்ளது.
குறிப்பாக 20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பலர் இது போன்ற சாகச அனுபவங்களைப் பெறுவதில் அதிக ஆர்வம் காட்டி வருவதாகச் சுற்றுலாத் துறை தரவுகள் தெரிவிக்கின்றன. நூல்களில் படிக்காத பல நடைமுறைப் பாதுகாப்பு முறைகளையும், பேரிடர் காலங்களில் பதற்றமின்றிச் செயல்படும் விதிகளையும் இந்த மையங்கள் மூலம் நேரடியாகப் புரிந்து கொள்ள முடிவதாகப் பயணிகள் குறிப்பிடுகின்றனர். பாதுகாப்பான கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் இந்தச் செயற்கை அனுபவங்கள் மூலம், நிஜ வாழ்க்கை அபாயங்களை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை கிடைப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சுற்றுலா பயணிகளிடையே அதிகரித்து வரும் இந்த வித்தியாசமான வரவேற்பைத் தொடர்ந்து, நாட்டின் பிற பகுதிகளிலும் இது போன்ற கூடுதல் மையங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்தச் செயற்கை சுற்றுலா முறை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.