Posted in

எலான் மாஸ்க்கை போலவே இருக்கும் உணவக உரிமையாளர்! வைரலான வீடியோ!

உலகின் பெரும் பணக்காரரும் விண்வெளித் துறை முன்னணித் தொழிலதிபருமான இலான் மாஸ்க் (Elon Musk) போன்றே அச்சு அசலாகக் காட்சியளிக்கும் சீன உணவக உரிமையாளர் ஒருவரின் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உலகளவில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளன. “அசல் இலான் மாஸ்க்கை விட இவர்தான் பார்க்க மிகவும் கச்சிதமாக இருக்கிறார்” என்று நெட்டிசன்கள் ஆச்சரியத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சீனாவின் ஷான்சி (Shaanxi) மாகாணத்தில் உள்ள டோங்சுவான் நகரில் ‘யிலான்’ (Yilan) என்ற பார்பிக்யூ உணவகத்தை நடத்தி வரும் 48 வயதான மா ஜியான்பிங் (Ma Jianping) என்பவரே இந்த இணையப் பரபரப்பின் நாயகனாவார். உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்குச் உணவு பரிமாறும் போது எடுக்கப்பட்ட இவரது வீடியோ, சீனாவின் முன்னணி சமூக வலைத்தளமான ‘டூயின்’ (Douyin) தளத்தில் பகிரப்பட்டு லட்சக்கணக்கான லைக்குகளைக் குவித்து வைரலானது. மேலும், அவரது இயற்பெயர் ‘மா’ (Ma) என்று தொடங்குவதும், இலான் மாஸ்கின் பெயருடன் ஒத்துப்போவது நெட்டிசன்களுக்கு கூடுதல் சுவாரசியத்தை அளித்துள்ளது.

இந்தத் திடீர் பிரபல்யத்தைத் தொடர்ந்து, மா ஜியான்பிங்கின் உணவகத்தில் வாடிக்கையாளர்களின் வருகை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. பலரும் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும், கை குலுக்கவும் நீண்ட வரிசையில் காத்திருந்து உணவு உண்டு செல்கின்றனர். இதனிடையே, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட மீம்களில், இலான் மாஸ்க் கோட்-சூட் அணிந்திருப்பது போலவும், பிற தொழில்நுட்ப நிறுவனங்களின் சிஇஓ-க்களுடன் இணைந்து பார்பிக்யூ சமைப்பது போலவும் நெட்டிசன்கள் கற்பனையாகச் சித்தரித்துப் பகிர்ந்து வருகின்றனர்.

திடீரெனக் கிடைத்த இந்த உலகளாவிய வரவேற்பு குறித்துப் பேசிய மா ஜியான்பிங், ஆரம்பத்தில் தனக்குச் சற்று கூச்சமாகவும் பதற்றமாகவும் இருந்ததாகத் தெரிவித்துள்ளார். இருப்பினும், வணிக வாய்ப்புகளுக்காக நேரலை (Live Stream) செய்யும் எண்ணம் எதுவும் தனக்கில்லை என்றும், காலை 9 மணி முதல் நள்ளிரவு வரை தனது உணவகத்தை நேர்த்தியாக நடத்துவதிலேயே முழுக் கவனம் செலுத்த விரும்புவதாகவும் அவர் பணிவுடன் குறிப்பிட்டுள்ளார்.