Posted in

உசைன் போல்ட் ரேஞ்சுக்கு ஓடுதுப்பா ! அரை மாரத்தான் உலக சாதனையை சுக்கு நூறாக உடைத்த சீன ரோபோ

📅 வெளியானது: April 19, 2026

சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சி இப்போது மனித கால்களுக்கே சவால் விட ஆரம்பித்துவிட்டது. பெய்ஜிங்கில் நடந்த அரை மாரத்தான் போட்டியில், சீனாவின் ஹானர் (Honor) நிறுவனம் தயாரித்த ஹியூமனாய்டு ரோபோ ஒன்று, மனிதர்கள் இதுவரை படைத்திருந்த உலக சாதனையை வெறும் 7 நிமிட இடைவெளியில் தும்சம் செய்துள்ளது. 21 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 50 நிமிடம் 26 வினாடிகளில் கடந்து, “ஓடினா ஓட்டம்.. அப்படி ஒரு ஓட்டம்” என உலகையே வாயடைக்க வைத்துள்ளது இந்த இரும்பு மனிதன்.

இதற்கு முன்னதாக உகாண்டாவைச் சேர்ந்த ஜேக்கப் கிப்லிமோ என்பவர் 57 நிமிடங்களில் கடந்ததே உலக சாதனையாக இருந்தது. அதைத் தற்போது இந்த ரோபோ அசால்ட்டாக முறியடித்துள்ளது. கடந்த ஆண்டு இதே போட்டியில் முதலிடம் பிடித்த ரோபோ, 2 மணி நேரம் 40 நிமிடங்கள் எடுத்துக்கொண்டது. ஆனால், இந்த முறை “பூஸ்ட் குடித்தது போல” மின்னல் வேகத்தில் ஓடி வந்த ரோபோவை பார்த்து, “இது என்ன ரோபோவா இல்லை ஹுசைன் போல்ட்டின் தம்பியா?” என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

இருப்பினும், இந்தப் போட்டி முழுக்க முழுக்க சீரியஸாக மட்டும் இருந்துவிடவில்லை. ஒரு ரோபோ ஓடும்போது தடுப்புச் சுவரில் முட்டி மோதி மல்லாக்க விழுந்தது; மற்றொரு ரோபோ ஸ்டார்ட்டிங் பாயிண்டிலேயே “என்னால் முடியாதுப்பா” என்பது போலக் குப்புற விழுந்து ரசிகர்களுக்கு செம காமெடி விருந்து படைத்தது. இதைப் பார்த்த ரசிகர்கள், “ஓடுற ரோபோ ஓடுது, மத்ததெல்லாம் பல்டி அடிக்குது” எனச் சிரிப்பலையில் நனைந்தனர். கடந்த ஆண்டு வேடிக்கை பார்த்த சன் ஜிகாங் என்பவர், “ரோபோக்கள் மனிதர்களை முந்துவதை என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை” என ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளார்.

இந்த வெற்றி ‘புதிய யுகத்தின் ஆரம்பம்’ எனப் புகழப்பட்டாலும், இனி மாரத்தான் பந்தயங்களில் மனிதர்களுக்குப் பதில் ரோபோக்கள் மட்டுமே மெடல் வாங்குமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. எது எப்படியோ, சார்ஜ் ஏற்றிவிட்டால் ஓய்வே இல்லாமல் ஓடும் இந்த ரோபோக்களைப் பார்த்து, “அடுத்த ஒலிம்பிக்ஸில் ரோபோக்களுக்குத் தனி கேட்டகிரி வச்சிருங்கப்பா” என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.