பிரிட்டன் குற்றவியல் வரலாற்றிலேயே மிகக் கொடூரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் ஒரு கொலைச் சம்பவமாக ‘சோஹன்’ (Chohan) குடும்பப்படுகொலை பார்க்கப்படுகிறது. லண்டனில் வசித்து வந்த இந்திய வம்சாவளி கோடீஸ்வரரான அமர்ஜித் சோஹன், அவரது மனைவி நான்சி, அவர்களது 18 மாதக் குழந்தை தேவிந்தர், 8 வாரமே ஆன பச்சிளம் குழந்தை ரவீந்தர் மற்றும் பாட்டி சரஞ்சித் கவுர் ஆகிய ஐந்து பேரும் மர்மமான முறையில் மாயமானார்கள். ஆரம்பத்தில் அவர்கள் விடுமுறைக்குச் சென்றிருக்கலாம் எனப் போலீஸார் கருதினாலும், சோஹனின் தம்பி ஓன்கர் வர்மா நியூசிலாந்திலிருந்து வந்து தேடியபோதுதான், அந்த வீட்டில் இருந்த சீக்கிய புனித நூல் மற்றும் கலைந்து கிடந்த பொருட்கள் ஏதோ ஒரு விபரீதத்தை உணர்த்தின.
இந்த ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் வேரோடு அழித்த அந்தப் பாதகச் செயலுக்குப் பின்னால் இருந்தது ஒரு பேராசைப் பிடித்தக் கும்பல். அமர்ஜித் சோஹன் நடத்தி வந்த ‘சிபா பிரைட்’ (CIBA Freight) என்ற சரக்கு போக்குவரத்து நிறுவனத்தைக் கைப்பற்றி, அதன் மூலம் போதைப்பொருள் கடத்தலை அரங்கேற்றத் திட்டமிட்ட கென்னத் ரீகன் (Kenneth Regan) மற்றும் வில்லியம் ஹார்ன்சி (William Horncy) ஆகியோரே இந்தக் கொலையாளிகள். அமர்ஜித்துடன் சிறையில் பழக்கமான ரீகன், ஜாமீனில் வந்த பின் அமர்ஜித்திடமே ஓட்டுநராக வேலைக்குச் சேர்ந்தார். ஆனால், அந்த முதலாளியின் சொத்துக்களைத் திருடத் திட்டம் தீட்டி, ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் கடத்திக் கொடூரமாகச் சித்திரவதை செய்து கொன்றனர்.
இந்த வழக்கின் விசாரணையின்போது போலீஸார் கண்டறிந்த உண்மைகள் நெஞ்சைப் பதறவைத்தன. அமர்ஜித்தை ஒரு ரகசிய இடத்தில் வைத்துச் சித்திரவதை செய்து, தனது சொத்துக்களை ரீகனுக்கு எழுதித் தருவதாகப் பல வெற்றுக் காகிதங்களில் கையெழுத்து வாங்கியுள்ளனர். பின்னர் அவரைப் படுகொலை செய்து கடலில் வீசினர். அவரைத் தொடர்ந்து அவரது மனைவி, பச்சிளம் குழந்தைகள் மற்றும் பாட்டியையும் இரக்கமின்றி கொன்று புதைத்தனர். போலீஸார் சோஹனின் வீட்டுக்குள் நுழைந்தபோது, பாதியில் நிறுத்தப்பட்ட காலை உணவு, டோஸ்டரில் இருந்த பிரட், பாதியில் நிறுத்தப்பட்ட துணி துவைக்கும் இயந்திரம் என அந்தக் குடும்பம் எவ்வளவு அவசரமாகக் கடத்தப்பட்டது என்பதை அந்தச் சாட்சிகள் மௌனமாக எடுத்துரைத்தன.
பல மாதத் தேடுதலுக்குப் பிறகு, அமர்ஜித்தின் உடல் போர்ன்மவுத் கடற்பகுதியிலும், அவரது மனைவி நான்சியின் உடல் பூல் கடற்பகுதியிலும் கண்டெடுக்கப்பட்டன. பாட்டி சரஞ்சித்தின் மண்டை ஓடு ஒரு கடற்கரையில் ஒதுங்கியது. ஆனால், அந்த இரு பிஞ்சு குழந்தைகளின் உடல்கள் இன்றுவரை கண்டெடுக்கப்படவே இல்லை. கொலையாளிகள் முதலில் உடல்களை ஒரு பண்ணை நிலத்தில் புதைத்துவிட்டு, பின்னர் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் அவற்றை மீண்டும் தோண்டி எடுத்து, ஒரு படகு மூலம் நடுக்கடலுக்குக் கொண்டு சென்று வீசியது விசாரணையில் அம்பலமானது. ஒரு தொழிலைக் கைப்பற்றி போதைப்பொருள் கடத்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, எட்டு வாரக் குழந்தையைக் கூடக் கொல்லத் துணிந்த இவர்களின் மிருகத்தனம் ஒட்டுமொத்தப் பிரிட்டன் காவல்துறையையே அதிர வைத்தது.
இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான கென்னத் ரீகன் மற்றும் வில்லியம் ஹார்ன்சி ஆகியோருக்கு 2004-ம் ஆண்டு லண்டன் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இவர்களுக்கு உதவிய பீட்டர் ரீஸ் என்பவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. தற்போது ‘அமேசான் பிரைம்’ (Amazon Prime) தளத்தில் வெளியாகியுள்ள “Murdered or Missing: The Millionaire’s Babies” என்ற ஆவணப்படம், இந்தக் கொடூரக் கொலையின் பின்னணியையும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்கப் போராடிய தம்பி ஓன்கரின் வலியையும் உலகிற்குத் தோலுரித்துக் காட்டியுள்ளது.