Posted in

“Beast Mode” சிங்கம்: களமிறங்கிய 3 மணி நேரத்திலேயே அதிரடி காட்டிய சிங்கப்பெண் அதிரடிப்படை!

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், முதலமைச்சர் சி.ஜே.விஜய் தற்பொழுது ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ (Singappen Special Force – SSF) என்ற புதிய பிரிவைத் தொடங்கி வைத்துள்ளார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் இந்த சிறப்புப் படையின் இலச்சினை மற்றும் அதிநவீன ரோந்து வாகனங்களை அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் . தவெக அரசு பொறுப்பேற்றவுடன் முதல்வர் விஜய் கையெழுத்திட்ட முதல் மூன்று முக்கிய உத்தரவுகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சிறப்பு அதிரடிப்படை மாநிலம் முழுவதும் முறைப்படி பயன்பாட்டுக்கு வந்த வெறும் 3 மணி நேரத்திலேயே, களத்தில் இறங்கி அதிரடி நடவடிக்கைகளைத் (Beast Mode) தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பெண்கள் கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் 150-க்கும் மேற்பட்ட முக்கியமான “ஹாட் ஸ்பாட்” பகுதிகளில் இந்தச் சிறப்புப் படையினர் தங்களின் முதல் கட்ட ரோந்துப் பணிகளை உடனடியாகத் துவக்கினர். பெண்களைக் கேலி செய்பவர்கள் மற்றும் அச்சுறுத்துபவர்களுக்கு எதிரான உடனடி நடவடிக்கையாக இந்த வேகம் பார்க்கப்படுகிறது.

முதல் கட்டமாக இந்தத் திட்டத்திற்காக ரூ.354 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் 2,500 பெண் காவலர்கள் இந்தச் சிறப்புப் படையில் இணைக்கப்படவுள்ளனர் . மூத்த பெண் ஐபிஎஸ் அதிகாரி கே.பவானீஸ்வரி தலைமையில் இயங்கும் இந்த அதிரடிப்படை, முழுக்க முழுக்க முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் செயல்படும். ஒவ்வொரு ரோந்துப் பிரிவிலும் ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர், மூன்று பெண் காவலர்கள் அதிநவீன கருவிகள், வாக்கி-டாக்கிகள், உடல் கேமராக்கள் (Body Cams) மற்றும் கண்காணிப்பு ட்ரோன்களுடன் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவார்கள்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் தவெக அரசு எவ்வித சமரசமும் செய்துகொள்ளாது எனப் பிரகடனப்படுத்திய முதலமைச்சர் விஜய், போதைப்பொருள் புழக்கத்தை வேரோடு அறுப்பதே பெண்களின் பாதுகாப்பிற்குத் துணையாக இருக்கும் எனத் தெரிவித்தார். இந்தச் சிறப்புப் படை களத்தில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதால், வழக்கமான அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் (AWPS) இனி வழக்குகளை விசாரிப்பதிலும், குற்றவாளிகளுக்கு விரைவாகத் தண்டனை பெற்றுத் தருவதிலும் முழுமையாகக் கவனம் செலுத்த முடியும். காவல்துறையின் இந்த அதிரடி “சிங்கப்பெண்” அவதாரம் தமிழகப் பெண்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.