கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான ‘பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை’ முதலமைச்சர் விஜய் இன்று நேரில் சென்று திறந்து வைத்தார். திறப்பு விழாவுக்குப் பிறகு மையத்தின் ஒவ்வொரு தளமாகச் சென்று அங்கிருந்த நவீன வசதிகளை அவர் பார்வையிட்டார். அப்போது இரண்டாம் தளத்தில் அமைக்கப்பட்டிருந்த குழந்தைகள் நூலகம் மற்றும் அறிவியல் விளையாட்டுப் பகுதிக்கு அவர் சென்றார்.
அங்கு அமைக்கப்பட்டிருந்த அதிநவீன ‘லைட் ரியாக்ஷன்’ (Light Reaction) டிஜிட்டல் விளையாட்டுப் பகுதியைக் கண்டு வியந்த முதல்வர், அங்கிருந்த சிறுவர் சிறுமிகளுடன் இணைந்து உற்சாகமாக விளையாடினார். “விஜய் மாமா இப்படிப் பண்ணுங்க” என்று குழந்தைகள் அன்போடு கூறிய அறிவுறுத்தல்களைக் கேட்டு, அவரும் குழந்தையைப் போல மகிழ்ச்சியுடன் கேமில் பங்கேற்றார். முதலமைச்சரின் எளிமையான இந்த அணுகுமுறையும், குழந்தைகளுடன் அவர் செலவழித்த தருணங்களும் அங்கிருந்த அதிகாரிகளையும் பார்வையாளர்களையும் நெகிழச் செய்தது.
அறிவியல் மற்றும் வாசிப்புத் திறனை சிறுவயதிலேயே வளர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மையம், கோவை வாழ் குழந்தைகளுக்கு மிகப்பெரிய அறிவுப் பொக்கிஷமாக விளங்கும் எனப் பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
திறப்பு விழா நிகழ்ச்சிகளை நிறைவு செய்த முதல்வர், அடுத்தகட்டமாகத் தனது அரசுப் பயணத் திட்டத்தின் கீழ் கேரளாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.