Posted in

நவம்பர் 26, 27 தேதிகளில் மாணவர்களுக்குக் கல்வி விருது வழங்கும் முதல்வர் விஜய்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் சட்டமன்றத் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு இரண்டாம் கட்டமாகக் கல்வி விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா சென்னையில் வருகிற நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் இரண்டு நாட்களும் பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்கும் இந்த விழாவில், முதலமைச்சர் விஜய் நேரில் பங்கேற்று 36 தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு விருதுகளையும் ஊக்கத்தொகையையும் வழங்கவுள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்குத் தவெக சார்பில் 2023-ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வரும் நிலையில், விஜய் முதலமைச்சரான பிறகு முதல்முறையாக இந்த ஆண்டு விருதுகளை வழங்கி வருகிறார். முன்னதாக நவம்பர் 4-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற முதற்கட்ட விழாவில் அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 30 தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பெற்றோர்கள் முன்னிலையில் விருதுகள் வழங்கப்பட்டன.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அட்டவணையின்படி, நவம்பர் 26-ஆம் தேதி (வியாழக்கிழமை) கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொகுதி மாணவர்களுக்கும், நவம்பர் 27-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சேலம், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொகுதி மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னின்று கவனித்து வரும் அமைச்சர் என். ஆனந்த், சம்பந்தப்பட்ட மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி, மாணவர்களுக்கான தனி அடையாள அட்டைகள் மற்றும் பெற்றோர்களுக்கான அனுமதிச் சீட்டுகளை வழங்கியுள்ளார்.

மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மூலம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அனுமதிச் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களைச் சென்னைக்கு அழைத்து வரத் தனிப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விழா நடைபெறும் நாட்களில் காலையில் சென்னை வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்குத் தங்குவதற்கு அறைகள், காலை உணவு மற்றும் பகல் 11 மணியளவில் விழா அரங்கிற்கு அழைத்து வரப்பட்டு மதிய உணவு மற்றும் சிற்றுண்டிகள் வழங்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.