தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, கடந்த மே 10-ஆம் தேதி தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் சி. ஜோசப் விஜய். தவெக அரசு பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, காங்கிரஸ், விசிக மற்றும் இயூமுல போன்ற கூட்டணிக் கட்சிகளை உள்ளடக்கி இரு கட்டங்களாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இத்தகைய சூழலில், புதிய அரசு பொறுப்பேற்றப் பிறகு முதன்முறையாகத் தமிழ்நாட்டின் புதிய அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஜூன் 5) காலை 11 மணிக்குத் தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் முதலமைச்சர் விஜய் தலைமையில் அதிகாரப்பூர்வமாகக் கூடுகிறது.
மொத்தம் 35 அமைச்சர்களைக் கொண்ட தவெக தலைமையிலான இந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக சார்பில் மக்களுக்கு அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மற்றும் புதிய மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான முதற்கட்ட நிதி ஒதுக்கீடுகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
மேலும், கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் மறுபடியும் திறக்கப்பட்டுள்ள சூழலில், பள்ளி மாணவர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வித் துறை சார்ந்த முக்கிய மேம்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. இது தவிர, அண்மையில் எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்ட ‘சிங்கப்பெண் சிறப்புப் படை’ திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் பெண்கள் பாதுகாப்பு உத்திகள் குறித்தும், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்தும் முதலமைச்சர் விஜய் அமைச்சர்களுடனும், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தவுள்ளார்.
முன்னதாக, தவெக அரசை எதிர்க்கட்சிகள் ‘ரீல்ஸ் ஆட்சி’ என்று விமர்சித்து வரும் வேளையில், தங்களின் நிர்வாகத் திறமையையும் மக்கள் நலன் சார்ந்த ‘ரியல்’ செயல்பாடுகளையும் இந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்தின் வாயிலாகப் பறைசாற்றத் தவெக அரசு திட்டமிட்டுள்ளது. இன்று மதியம் வரை நீடிக்கவுள்ள இக்கூட்டத்தின் முடிவில், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான பல்வேறு அதிரடி அறிவிப்புகளும், புதிய அரசாணைகளும் வெளியாகும் என்பதால் ஒட்டுமொத்த தமிழக அரசியல் களமும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தை உற்றுநோக்கிப் பெரும் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கிறது.