தேசிய அளவில் தொகுதி மறுவரையறை (Delimitation Bill) மற்றும் மகளிர்க்கான இட ஒதுக்கீடு மசோதாவை எப்படியாவது நிறைவேற்றித் தீர வேண்டும் என மத்தியில் ஆளும் பாஜாக அரசு முனைப்புக் காட்டி வரும் நிலையில், தமிழகத்தின் பரம எதிரியாகக் கருதப்படும் திமுகவுடன் பாஜக மறைமுகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாகத் தீவிர பாஜக எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்து வரும் திமுக, இந்த முக்கிய விவகாரத்தில் பாஜகவின் திட்டங்களுக்கு மறைமுகமாக வழிவிடுகிறதா என்ற பலத்த சந்தேகம் டெல்லி வட்டாரங்களில் எழுந்துள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தமிழகத்தில் புதிய அரசியல் சமன்பாடுகள் உருவாகியுள்ளன. குறிப்பாக, தவெக அரசுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளதால், அதிருப்தியடைந்த திமுக ‘இந்தியா’ (INDIA) கூட்டணியின் கூட்டங்களைப் புறக்கணித்துத் தள்ளி நின்று வருகிறது. இத்தகைய ஒரு சாதகமான அரசியல் பிளவைத்தான் பாஜக தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தீவிரமாகப் காய்களை நகர்த்தி வருகிறது. நாடாளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற திமுகவின் ஆதரவு அல்லது மறைமுக ஒத்துழைப்பு பாஜகவிற்குத் தற்பொழுது அவசியமாகியுள்ளது.
தொகுதி மறுவரையறையைத் தீவிரமாக எதிர்த்து வந்த திமுக, திடீரென அதனை ஆதரித்தால் தங்களின் திராவிட கொள்கைக்கும், தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளுக்கும் துரோகம் இழைத்ததாக மாறிவிடும் என அஞ்சுகிறது. இதற்காகவே, நாடாளுமன்றத்தில் மசோதா மீது வாக்கெடுப்பு (Voting) நடைபெறும் நாளில், திமுக எம்பிக்கள் மசோதாவை எதிர்த்துப் பேசிவிட்டு, வாக்கெடுப்பைப் புறக்கணித்து ‘வெளிநடப்பு’ (Walkout) செய்துவிட வேண்டும் என்ற ரகசிய உத்தியை பாஜகவே திமுகவிற்கு ஐடியாவாகக் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. திமுக வெளிநடப்பு செய்வதன் மூலம் அவையின் ஒட்டுமொத்த பலம் குறைந்து, பாஜகவிற்கு மசோதாவை எளிதாக நிறைவேற்றத் தேவையான பெரும்பான்மை கிடைத்துவிடும் என்பதே இந்த ‘மறைமுக டீலின்’ பின்னணி என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.
அனைத்து மாநிலங்களுக்கும் சரிசமமாக 50% அளவில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் சமாதானம் கூறப்பட்டாலும், மக்கள் தொகையைக் கச்சிதமாகக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் வட மாநிலங்களை விடக் குறையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. “அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை” என்ற தத்துவத்தின் அடிப்படையில், பாஜகவின் குடையில் திமுக ஒதுங்க நினைத்தால், அது தமிழகத்தில் கட்சியின் எதிர்கால அரசியலையும் வாக்கு வங்கியையும் கடுமையாகப் பாதிக்கும் என்று திமுகவின் சீனியர்கள் தலைமைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் திமுகவின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதை அறிய ஒட்டுமொத்த தமிழக அரசியல் களமே காத்துக் கொண்டிருக்கிறது.